வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 28 மார்ச் 2015 (20:49 IST)

இறுதிப் போட்டியில் வெல்லப்போவது யார்? சாம்பியன் பட்டம் நியூசிலாந்திற்கா, ஆஸி-க்கா?

ஞாயிற்றுக்கிழமை [29-03-15] நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா அல்லது ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் ஆகுமா என்பது குறித்த ஓர் முன்னோட்டம்.
 

 
நேருக்கு நேர்:
 
நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 125 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 84 முறையும், நியூசிலாந்து 35 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 6 ஆட்டங்களில் முடிவில்லை.
 
உலகக்கோப்பையில் இதுவரை:
 
உலக கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி 6-ல் ஆஸ்திரேலியாவும், 3-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அது பற்றிய விவரங்களை இங்கு காண்போம்.
 
1. 1987ஆம் ஆண்டு நடைபெற்ற உலக்கோப்பை போட்டியில் இரண்டு லீக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் மோதின. அதில் இரண்டிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றது. இந்தூர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. சண்டிகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தை தோற்கடித்தது.
 
2. 1992ஆம் ஆண்டு ஈடன் பார்க்கில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில், நியூசிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் கேப்டன் மார்ட்டின் குரோவ் சதம் (100) அடித்தார். இந்த ஆட்டத்தில், கடைசி 17 பந்துகளில் மட்டும் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
3. 1996ஆம் ஆண்டு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கிறிஸ் ஹாரிஸ் 130, கெர்மோன் 89 ரன்கள் குவித்தனர்.
 
ஆனால் அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை ஈட்டியது. அந்த அணியின் மார்க் வாக் 110, ஸ்டீவ் வாக் 59 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
 
4. 1999ஆம் ஆண்டு ஷோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் குவித்தது.
 
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 45.2 ஓவர்களில் 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் டூவ்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார்.
 
5. 2003ஆம் ஆண்டு போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுக்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
ஆனால் அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 30.1 ஓவர்களில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணியின் பிரெட்லீ 5 விக்கெட்டுகளும், மெக்ராத் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
 
6. 2007ஆம் ஆண்டு குவின்ஸ் பார்க்கில் நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 215 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. மேத்யூ ஹைடன் 103, ரிக்கி பாண்டிங் 66 ரன்கள் எடுத்தனர்.
 
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 25.5 ஓவர்களில் 133 ரன்களில் சுருண்டது. அந்த அணியில் இரண்டு வீரர்கள்தான் இரட்டை இலக்கத்தை தாண்டினர். மற்ற 9 வீரர்களும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பதுதான் கொடுமை. பிராட் ஹாக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
7. 2011ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 206 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 34 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் எடுத்தது. வாட்சன் மற்றும் ஹாடின் அரைச்சதம் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

இந்த உலக்கோப்பையில்:
 
8. நடப்பு உலக கோப்பை தொடரில் ஆக்லாந்து ஈடன்பார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 32.2 ஓவர்களில் 151 ரன்களில் சுருண்டது. டிரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 

 
பின்னர் ஆடிய 23.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில். மெக்கல்லம் 50 ரன்கள் எடுத்தபோதிலும் நியூசிலாந்தின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். கடைசிவரை தாக்குப்பிடித்த வில்லியம்சன் அணியை வெற்றிபெற வைத்தார்.
 
வெற்றி யாருக்கு?:
 
பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி, இந்த உலகக்கோப்பையில் ஒன்றில்கூட தோல்வியடையாமல், தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளையப் போட்டியில் வெற்றி பெற்றால் அது நியூசிலாந்து அணியின் 300ஆவது ஒரு நாள் போட்டி வெற்றியாகவும் அமையும்.
 

 
இந்த உலகக்கோப்பை போட்டியில் மார்டின் கப்தில் 532 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மெக்கல்லம் 328, ஆண்டர்சன் 231, எல்லியாட் 227, சீன் வில்லியம்சன் 222 ரன்கள் எடுத்து மிரட்டுகின்றனர்.
 
அதுபோல பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட் இந்த உலகக்கோப்பையில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர் தவிர டேனியல் வெட்டோரி 15, டிம் சவுதி 15, கோரி ஆண்டர்சன் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி பலமான அணியாகவே உள்ளனர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ஆனால், இந்த உலக கோப்பையின் லீக் முதல் அரையிறுதிப் போட்டி வரையிலான தனது அனைத்து ஆட்டங்களையும் நியூசிலாந்து அணி சொந்த நாட்டிலேயே விளையாடி இருக்கிறது. இப்போது தான் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடவிருக்கிறது.
 
ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றிருக்கிறது. அதுவும் நாளை மோதவுள்ள நியூசிலாந்திடமே தோற்றிருக்கிறது. இதற்கு பலிதீர்க்க ஒரு வாய்ப்பாக ஆஸ்திரேலியா எடுத்துக் கொள்ளும் என்பதற்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
 

 
மேலும், அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 346, மேக்ஸ்வெல் 324 ரன்கல் எடுத்து முன்னணியில் உள்ளனர். மைக்கேல் கிளார்க், ஜார்ஜ் பெய்லி, ஷேன் வாட்சன், வார்னர் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். மத்திய கள ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், பிராட் ஹாடின் போன்ற வீரர்களும் மிரட்டுவார்கள். கடைசி கட்டத்தில் ஜான்சன், ஃபால்க்னர் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி எதிரணையினரை மிரட்டி வருகிறார்கள்.
 

 
பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க் இந்த உலகக்கோப்பையில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஜான்சன், ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் போன்ற வீரர்கள் மிரட்டுவார்கள். கம்மின்ஸ், ஃபால்க்னர், மேக்ஸ்வெல் போன்ற பகுதிநேர பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
 
நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்த உலககோப்பையை டேனியல் வெட்டோரிக்கு சமர்ப்பிப்போம்’ என்று கூறியுள்ளார். இதேபோல இந்த உலகக்கோப்பை போட்டியோடு ஓய்வு பெறவிருக்கும் கிளார்க்குக்கு சமர்பிக்க முயற்சிப்பார்கள். இதனால் ஆட்டத்தின் போக்கை கணிப்பது கடிணமாக இருக்கும் என்பது உறுதி.
 
அணி வீரர்கள்:
 
ஆஸ்திரேலியா:
மைக்கேல் கிளார்க் (கே), ஜார்ஜ் பெய்லி, பேட் கம்மின்ஸ், ஜேவியர் டொஹார்டி, ஜேம்ஸ் ஃபால்க்னர், ஆரோன் பிஞ்ச், பிராட் ஹாடின் (வி,கீ.), ஜோஸ் ஹசில்வுட், மிட்செல் ஜான்சன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர், ஷேன் வாட்சன்.
 
நியூசிலாந்து:
பிரண்டன் மெக்கல்லம் (கே), ட்ரெண்ட் போல்ட், கிராண்ட் எல்லியாட், டாம் லாதம், மார்டின் கப்தில், மிட்செல் மெக்லெனகன், நாதன் மெக்கல்லம், கெய்ல் மில்ஸ், ஆடம் மில்னே, டேனியல் வெட்டோரி, கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கோரி ஆண்டர்சன், லூக் ரோஞ்சி, டிம் சவுதி