வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 27 மார்ச் 2016 (19:41 IST)

ஆஃப்கானிஸ்தானிடம் மண்டியிட்டது வெஸ்ட் இண்டீஸ்; 6 ரன்கள் வித்தியாசத்தில் கோட்டை விட்டது

ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி 20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
 

 
இன்று நாக்பூர் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக நஜிபுல்லா சத்ரான் 40 பந்துகளில் 48 ரன்களும், விக்கெட் கீப்பர் மொஹமது செஷாத் 24 ரன்களும், கேப்டன் ஸ்டானிக்‌ஷை 16 ரன்களும் எடுத்தனர்.
 
மற்ற வீரர்கள் எவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் பத்ரி 3 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரூ ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
அடுத்து களமிறங்கிய எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகப்பட்சமாக ட்வைன் பிராவோ 28 ரன்களும், தொடக்க வீரர் ஜோசன் சார்லஸ் 22 ரன்களும் ராம்தின் 18 ரன்களும் எடுத்தனர்.
 
ஆனால், முக்கிய வீரர்களான சாமூவேல்ஸ் [5], ஆண்ட்ரூ ரஸ்ஸல் [7], கேப்டன் டேரன் சமி [6] ஆகியோர் சீக்கிரமே வெளியேறி ரசிகர்களை ஏமாற்றினர். ஆஃப்கானிஸ்தான் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது.
 
அந்த அணியில் மொஹமது நபி மற்றும் ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதினை 48 ரன்கள் குவித்த நஜிபுல்லா சத்ரான் கைப்பற்றினார்.
 
முன்னதாக தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை தோற்கடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி கத்துக்குட்டி அணியான ஆஃப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.
 
ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்ற ஆஃப்கானிஸ்தான் அணி கடைசிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய பெருமையுடன் தாயகம் திரும்புகிறது.