இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம் - சோயப் மாலிக்


லெனின் அகத்தியநாடன்| Last Modified செவ்வாய், 1 மார்ச் 2016 (16:56 IST)
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவதற்கு ஆவலாக உள்ளோம் என்று பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் கூறியுள்ளார்.
 
 
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிக்களுக்கு இடையேயான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
 
இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி 83 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. அதிலும், சர்ஃப்ராஸ் அஹமது [25] மற்றும் குர்ரம் ரஹ்மான் [10] இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தை கடத்திருந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
 
இதன் மூலம், உலகக்கோப்பை, ஆசியக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்திய அணியிடம் தோல்வியுறும் வரலாறும் தொடர் கதையானது.
 
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக், “நாங்கள் இந்தியாவிற்கு எதிராக விளையாடுகையில், ஆடுகளத்தின் தன்மையையும், சீதோஷ்ண நிலைமையையும் கணிப்பதில் கோட்டை விட்டுவிடுகிறோம்.
 
மேலும், அதற்கு சூழ்நிலைகளுக்கு எங்களை பொறுத்திக்கொள்வதற்கு பதிலாக, எல்லா பந்தையும் அடித்து ஆடுவதற்கு முயற்சி செய்வதில் இறங்கி விடுகிறோம்” என்றார்.
 
சோயப் மாலிக் மேலும் கூறுகையில், எந்த ஒரு அணியும் தோல்வியால் ஏமாற்றம் அடையவே செய்யும் என்றும், அதேசமயம் அதிலிருந்து மீண்டு மீதமுள்ள போட்டிகளில் வெற்றுபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
 
”இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத விரும்புகிறோம். அவர்களுக்கு எதிராக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம். எல்லாமுமே, வெவ்வேறு நிலைமைகளுக்கு ஏற்றார்போல தங்களை மாற்றியமைத்துக் கொள்வதில்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :