தென் ஆப்பிரிக்காவிடம் நிறைய கற்றுக்கொண்டேன் - ஷிகர் தவான்


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 14 மார்ச் 2016 (14:22 IST)
தென் ஆப்பிரிக்க அணியிடம் தான் நிறைய கற்றுக்கொண்டதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறியுள்ளார்.
 
 
சனிக்கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் டி 20 உலக்கோப்பை போட்டியில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
 
இந்த போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி இந்திய அணி தோல்வியடைந்தாலும், தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 53 பந்துகளில் [10 பவுண்டரிகள்] 73 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
பின்னர் இது குறித்து கூறியுள்ள ஷிகர் தவான், ”தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டத்தின் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். 15ஆவது, 16ஆவது ஓவர் வரை நின்று விளையாடியது, அடுத்து வரும் போட்டிகளுக்கு நிச்சயம் கை கொடுக்கும். சிறப்பாக செயல்பட முடியும்” என்றார்.
 
இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பேசிய தவான், ‘நிச்சயமாக, இவையெல்லாம் ஆட்டத்தில் சாதாரணமான விஷயங்கள். ஆட்டத்தை சிறப்பாக முடிக்கும் திறன் படைத்த வீரர்களால் கூட, எப்போதுமே இலக்கை எட்டி ஆட்டத்தை சிறப்பாக முடிக்க முடியும் என்று உறுதியாக கூற முடியாது.
 
ஒவ்வொருவருமே அவரவர் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதுதான் விஷயம். பெரிய இலக்கை நோக்கி ஆடியபோதும் நெருங்கிவிட்டோம். ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.
 
அதன் பிறகு வலுவான பாட்னர்ஷிப் அமைத்து இலக்கை நெருங்கிச் சென்றோம். இந்த போட்டி எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுத்தது. நீங்கள் இன்றைக்கு என்ன கற்றுக்கொள்கிறீர்கள் என்பது, அது வருங்காலத்தில் நடைமுறைப்படுத்துவது என்பதுதான்’ என்றார்.
 
டி 20 உலகக்கோப்பைப் போட்டியை சொந்த மண்ணில் விளையாடப்போவது குறித்துப் பேசிய தவான், “நாங்கள் ஒரு குடும்பமாக நெருங்கிப் பழகுகிறோம். எங்கள் மீதான எதிர்பார்ப்பின் சுமையை, நாங்கள் தனிப்பட்ட வீரர்களாக அல்லாமல் குழுவாக பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறோம்.
 
நாங்கள் சொந்த மண்ணில் விளையாட உள்ளோம். சொந்த நாட்டின் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விளையாடும்போது எப்போதும் உள்ளதுதான். நாங்கள் மேற்கூறிய விஷயங்களை பயன்படுத்துவோம்” என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :