வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (03:44 IST)

விராட் கோலி இரட்டை சதம்; அஸ்வின் சதம் - இந்தியா அபாரம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், விராட் கோலி இரட்டை சதத்தாலும், அஸ்வினின் சதத்தாலும் இந்திய அணி 566 ரன்கள் குவித்துள்ளது.
 
இரட்டை சதம் அடித்ததும் மைதானத்தை முத்தமிடும் விராட் கோலி
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கியது.
 
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில், முரளி விஜய் 7 ரன்கள், புஜாரா 16 ரன்கள், ஷிகர் தவான் 84 ரன்கள், ரஹானே 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
இதற்கிடையில், அபாரமாக ஆடிய விராட் கோலி 134 பந்துகளில் [11 பவுண்டரிகள்] சதம் அடித்து அசத்தினார். பின்னர், ரவிச்சந்திரன் அஸ்வினுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
 
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. விராட் கோலி 143 ரன்களுடனும், அஸ்வின் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்திய அணி இரண்டாவது நாளை தொடர்ந்தது.
 
கேப்டன் விராட் கோலி 208 பந்துகளில் 150 ரன்களையும், 281 பந்துகளில் [24 பவுண்டரிகள்] தனது முதல் இரட்டை சதத்தை கடந்தார். 200 ரன்கள் கடந்ததும் கேப்ரியேல் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். கோலியும், அஸ்வினும் இணைந்து 168 ரன்கள் குவித்தனர்.
 
அவரைத் தொடர்ந்து அஸ்வின் 237 பந்துகளில் [12 பவுண்டரிகள்] சதம் கடந்தார். இதற்கிடையில் விருத்திமான் சஹா 40 ரன்களில் வெளியேறினார். பின்னர், அஸ்வின் 113 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து அமித் மிஸ்ரா 53 ரன்களிலும் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்தது.
 
மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் தேவேந்திர பிஷ்ஷூ, பிராத்வைட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கேப்ரியேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. பிராத்வைட் 11 ரன்களுடனும், தேவேந்திர பிஷ்ஷூ ரன் ஏதும் இல்லாமலும் களத்தில் இருந்தனர்.