வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2016 (19:13 IST)

சேஸிங் செய்வதில் சச்சினை விட கோலி சிறந்த வீரர் - கங்குலி புகழாரம்

இலக்கை துரத்திப் பிடிப்பதில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரைவிட விராட் கோலி சிறந்த வீரர் என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை [27-03-16] அன்று மொஹாலியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.
 
வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெற்ற இந்த போட்டியில் தனி ஆளாக நின்று விராட் கோலி போட்டியை வென்று கொடுத்தார். இந்த ஆட்டத்தில் விராட் கோலி 51 பந்துகளில் [9 பவுண்டரி, 1 சிக்ஸர்] 82 ரன்கள் எடுத்தார்.
 
இந்த ஆட்டத்தைப் பார்த்து வீரேந்தர் சேவாக், அணில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர், இயான் சேப்பல், வார்னே உள்ளிட்ட வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள இந்திய அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி, “கோலி நீண்ட காலமாக இலக்கை துரத்திப் பிடிப்பதில் மிகச்சிறந்த வீரராக இருக்கிறார். நான் மிகப்பெரிய வீரரான சச்சின் டெண்டுல்கரையும் மனதில் வைத்துதான் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ”சச்சின் எப்போதுமே சிறப்பானவர்தான். ஆனால், இலக்கை துரத்திப் பிடிப்பதை பொறுத்தமட்டில் சச்சினை விட விராட் கோலி சிறந்த முறையில் செய்து முடிக்கிறார். விராட் ஒரு அசாதாரண வீரர்” என்று கூறியுள்ளார்.