சென்னை, ராஜஸ்தான் அணியின் டாப் 10 வீரர்கள் புதிய அணியில் இடம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 30 அக்டோபர் 2015 (15:43 IST)
ஐபிஎல் போட்டியில் இருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீது தடைவிதிக்கப்பட்டதால், புதிதாக இடம்பெறவுள்ள அணியில் இரு அணிகளிலும் உள்ள டாப் 10 வீரர்கள் இடம்பெறவுள்ளனர்.
 
 
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை பற்றி நீதிபதி முகுல் முத்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.
 
இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்தரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தி, உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
 
அந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆராய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் மற்றொரு குழு அமைக்கப்பட்டது.
 
அந்த குழு, முத்கல் குழுவின் அறிக்கையை ஆராய்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடையும், குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து உத்தரவிட்டது.
 
இதற்கிடையில் புதிய இரண்டு அணிகள் இடம்பெற பிசிசிஐ அனுமதி அளித்தது. அதன்படி, அடுத்து ஆண்டு நடைபெறவுள்ள 9ஆவது ஐபிஎல் போட்டியில் இந்த புதிய இரண்டு அணிகளும் இடம்பெறும்.
 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளிலும் உள்ள டாப் 5 வீரர்கள் நேரடியாக இந்த புதிய அணிகளில் இடம்பெற உள்ளனர். மீதமுள்ள வீரர்கள் வழக்கம்போலவே ஏலத்தின் மூலமாக எடுக்கப்படுவார்கள்.
 
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளின் கேப்டன் முறையே தோனி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் நிச்சயம் இடம் பிடிப்பார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :