வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2016 (15:59 IST)

3 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அதிர்ச்சி தோல்வி

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
 

 
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும், 3 -1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் இழந்தது.
 
இந்நிலையில், இன்று முதல் டி 20 போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் மார்டின் கப்தில் 34 பந்துகளில் 58 ரன்களும், வில்லியம்சன் 42 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். இலங்கை தரப்பில் குலசேகரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
பின்னர், 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில், வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் 2 ரன்களும், இரண்டாவது பந்தில் 1 ரன்னும் எடுக்கப்பட்டது.
 
3ஆவது பந்தில் குலசேகரா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில், எலியாட் பந்தில் போல்ட் இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் கபுகேதரா 17 ரன்களில் ரன் அவுட் ஆகினார்.
 
கடைசி இரண்டு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5ஆவது பந்தில்  ரன்னும், கடைசி பந்தில் 4 ரன்களும் அடிக்க இலங்கை 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
 
நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ட்ரெண்ட் போல்ட்டுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.