போராடி தோற்றது இந்தியா; 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 14 மார்ச் 2016 (14:32 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
 
 
சனிக்கிழமை அன்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
 
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் 33 பந்துகளில் [7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 56 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவர் ரிட்டையர் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
 
அடுத்து களமிறங்கிய ஜே.பி.டுமினியும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர், 44 பந்துகளில் [6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 67 ரன்கள் எடுத்தார். பின்னர் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தாலும், ரன்ரேட் குறையாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பார்த்துக்கொண்டனர்.
 
20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் ஹர்த்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், முஹமது சமி மற்றும் ஜாஸ்பிரிட் பும்ரா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர் களமிறங்கிய இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 10 ரன்களிலும் விராட் கோலி 1 ரன்னிலும், அஜிங்கே ரஹானே 11 ரன்களிலும் வெளியேறினார். இதனால், 48 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
 
இதனையடுத்து, ஷிகர் தவானுடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 94 ரன்கள் குவித்தனர். ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினர்.

ஷிகர் தவான் 53 பந்துகளில் [10 பவுண்டரிகள்] 73 ரன்களும், சுரேஷ் ரெய்னா 26 பந்துகளில் [3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 41 ரன்களும் எடுத்தனர்.
 
பின்னர் தோனியும், யுவராஜ் சிங்கும் களமிறங்கினர். ஆனாலும், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. தோனி 30 [16 பந்துகள்] ரன்களுடனும், யுவராஜ் சிங் 16 [8 பந்துகள்] ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :