வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 12 மார்ச் 2015 (21:31 IST)

146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 146 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.
 
இன்று நடைபெற்ற 11ஆவது உலகக்கோப்பை போட்டியின் 36ஆவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் கேப்டன் முகமது தாகிர், பீல்டிங்கை தேர்வு செய்தார்.
 
உற்சாகத்தில் தென் ஆப்பிரிக்கா அணியினர்
அதன்படி தென் ஆப்பிரிக்க அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டக்காரர் ஆம்லா வெறும் 12 ரன்னில் ஏமாற்றினார். பின் வந்த ரோசோவ் மற்றும் குவிண்டன் டி காக் ஜோடி பொறுப்பாக செயல்பட தொடங்கியது. எனினும் காக் 26 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக ரோசோவ் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். 
 
மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட டேவிட் மில்லரும் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் இணைந்த கேப்டன் டிவிலியர்ஸ் அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தி பந்துகளை எல்லை கோட்டிற்கு சிதறடித்தார். அவர் 54 பந்துகளில் அரைச்சதம் எடுத்தார்.
 
சதம் அடிக்கும் தருவாயில் இருந்த டிவிலியர்ஸ் எதிர்பார விதமாக 99 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் டுமினி 23 ரன்னில் வெளியேற, பெஹார்டியன் வெளுத்து வாங்கினார். அவர் 28 பந்துகளில் [3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] அரைச்சதத்தை எட்டினார்.
 
99 ரன்கள் எடுத்த டி வில்லியர்ஸ்
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை குவித்தது. இறுதிவரை களத்தில் நின்ற பெஹார்டியன் 31 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். ஐக்கிய அரபு எமிரேட்சில் அதிகபட்சமாக முகமது நவீது 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பின்னர் 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொடக்க ஆட்டக்காரர் பெரங்கர் 5 ரன்களில் வெளியேறினார். ஓரளவு சிறப்பான தொடக்கத்தை அளித்த அம்ஜத் அலி 21 ரன்கள் எடுத்தார். குர்ரம் கான் 12 ரன்களில் வெளியேறினார்.
 
57 ரன்கள் எடுத்த ஸ்வப்னில் பாடில்
பின்னர் களமிறங்கிய ஷைமன் அன்வர் மற்றும் ஸ்வப்னில் பாடில் அணியை சரிவில் இருந்து மீட்டனர். எதிர்பாராதவிதமாக ஷைமன் அன்வர் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் முகம்மது நவீத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
 
இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 47.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டும் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பாடில் [5 பவுண்டரிகள்] 57 எடுத்தார்.
 
2 விக்கெட்டுகளை சாய்த்த டி வில்லியர்ஸ்
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிளந்தர், மோர்னே மோர்கல், டி வில்லியர்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதினை டி வில்லியர்ஸ் பெற்றார்.