வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (13:12 IST)

வங்கதேசத்தில் பரிசாக கிடைத்த மோட்டார் சைக்கிளை விற்றார் ஷிகர் தவான்

வங்கதேச அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 75 ரன்கள் அடித்து அசத்தினார். இதற்காக அவருக்கு ஒரு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.
 

 
ஆனால் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டாம். அதற்கு இணையான ரொக்கத்தை வழங்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஷிகர் தவான் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிளுக்கு இணையான ரொக்கப்பரிசை வழங்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.
 
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தலைவர் ஃபாருக் அகமது கூறுகையில், ''மோட்டார் சைக்கிளுக்கு இணையான தொகையை வழங்க ஷிகர் தவான் கேட்டுக்கொண்டதால், அதற்கான தொகை அவர் இந்தியா சென்றதும் வழங்கப்படும்'' என்றார்.
 
பொதுவாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இந்திய வீரர்கள் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பரிசாக கிடைத்தால், அதனை தாய்நாட்டுக்கு கொண்டு வருவதில்லை. சும்மா சம்பிரதாயமாக அவர்கள் கையில் சாவி கொடுத்து வாங்கப்படும்.
 
இதுகுறித்து ஷிகர் தவானின் தந்தை, மகேந்திர பால் தவான் கூறுகையில், ''ஷிகர் தவான் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் விருப்பம் கொண்டவர் இல்லை. நான்கு சக்கர வாகனம் என்றாலும் குடும்பத்தினருக்கு பயன்படும். மோட்டார் சைக்கிள் என்பதால் அங்கேயே கொடுத்து விட ஷிகர் தவான் விரும்பினார்'' என்றார்.