இந்தியர்களை புகழ்ந்ததற்கு இதுதான் காரணம் : ஷாகித் அப்ரிடி விளக்கம்


Murugan| Last Modified செவ்வாய், 15 மார்ச் 2016 (17:15 IST)
இந்தியாவை புகழ்ந்தது ஏன் என்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஷாகித் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார்.

 

 
பாதுகாப்பு குறைபாடு காரணமாக டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வர தாமதமானது. இந்திய கிரிக்கெட் சங்கம் அளித்த உறுதியை அடுத்து பாகிஸ்தான் அணி  இந்தியா வந்தது.
 
இந்நிலையில் இந்தியா வந்த பாகிஸ்தான் அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியாவின் பாதுகாப்பையும், இந்தியர்களின் அன்பையும் வெகுவாக பாராட்டினர்.
 
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் மகிழ்சியை வேறு எந்த நாட்டிலும் அனுபவித்ததில்லை என்று தெரிவித்தார். பாகிஸ்தானைப் போல் இங்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிகம் இருக்கின்றனர் என்றார்.
 
அப்ரிடி இப்படி பேசியது பாகிஸ்தான் மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவை புகழ்ந்து பாகிஸ்தானுக்கு தேசத்துரோகம் இழைத்துவிட்டதாக அப்ரிடிக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இதுபற்றி அப்ரிடி விளக்கம் அளிக்கையில் “இந்திய ரசிகர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையிலேயே நான் அப்படி பேசினேன். இதற்காக பாகிஸ்தான் ரசிகர்களை சிறுமைப்படுத்துகிறேன் என்று கூறுவது தவறு. அது என் நோக்கமும் அல்ல. நான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் மட்டுமல்ல. பாகிஸ்தான் மக்களின் பிரதிநிதியாகவும் இருக்கிறேன். எனவே என்னுடைய கருத்தை நேர்மறையாகப் பார்க்க வேண்டும்.
 
எனக்கான அடையாளத்தை பாகிஸ்தான் நாடுதான் தந்தது. இந்தியாவில் விளையாடும் போது நாங்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்று தெரிவிக்கவே நான் அப்படி கூறினேன்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :