’நான் ஓய்வுபெற இருந்ததை சச்சின்தான் தடுத்தார்’ - சேவாக்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2015 (16:18 IST)
2007ஆம் ஆண்டு அணியிலிருந்து தான் ஓய்வுபெற இருந்த முடிவை சச்சின் டெண்டுல்கர்தான் தடுத்தார் என்று வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
 
 
இரண்டரை ஆண்டுகளாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட இந்திய அணியின் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் கடந்த 20ஆம் தேதி தனது 37ஆவது பிறந்தநாள் அன்று ஓய்வை அறிவித்தார். ஐபிஎல் டி 20 போட்டிகள் உட்பட அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
இந்நிலையில், இது குறித்து சேவாக், "எந்த வீரருமே சர்வதேச போட்டிகளில் உச்சத்தில் இருக்கும்போதுதான் ஓய்வை அறிவிக்க விரும்புவார்கள். நானும் அவ்வாறு சர்வதேசப் போட்டிகளில் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வை அறிவித்திருந்தால், நானும் ஓய்விற்கு முன்னதான உரையாற்றியிருக்க முடியும். ஆனால் விதி எனக்காக வேறு ஒன்றை வைத்திருந்துள்ளது. 
 
2007ஆம் ஆண்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவுடன் ஓய்வு அறிவிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் டெண்டுல்கர்தான் அவ்வாறு செய்யவதிலிருந்து தடுத்தார். 
 
2013ஆம் ஆண்டு அணித் தேர்வாளர்கள் ஆஸ்திரேலியா தொடரின் போது என்னை அணியிலிருந்து நீக்கிய போதே என்ன செய்யப் போகிறேன் என்று என்னிடம் கேட்கவில்லை.
 
அணி தேர்வாளர்கள் என்னிடம் அந்த தொடரில் இருந்து என்னை நீக்கவிருப்பதாக கூறியிருந்தால், அந்தத் தொடரிலேயே எனது ஓய்வை அறிவித்திருப்பேன். 
 
நான் விளையாடிய வீரர்களில் அனில் கும்ப்ளே சிறந்த கேப்டன். அவர்தான் நம்முடைய தன்னம்பிக்கை ஊக்கப்படுத்துவார். 
 
நான் எப்போதும் கிரிக்கெட் ஆட்டத்துடன் தொடர்பில்தான் இருப்பேன். பிசிசிஐயிடம் இருந்து அல்லது வர்ணனையாளராக வாய்ப்பு கிடைத்தால் அது குறித்து பரிசீலினை செய்வேன். எனது பேட்டிங் போலவே எனது வர்ணனையும் நேர்மையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :