வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 31 ஜூலை 2016 (11:26 IST)

அஸ்வின் மீண்டும் சுழல் ஜாலம் - 196 ரன்களுக்குள் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களுக்குள் சுருண்டது.
 

 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிராத்வெய்ட் [1], டேரன் பிராவோ [0], சந்திரிகா [5] என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
 
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர், களமிறங்கிய மார்லன் சாமுவேல்ஸ் மற்றும் பிளாக்வுட் இருவரும் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 4ஆவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர்.
 
பின்னர், பிளாக்வுட் 62 ரன்களிலும், சாமுவேல்ஸ் 37 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் எடுத்தது.
 
இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, மொஹமது ஷமி இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய முதல்நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கே.எல்.ராகுல் 75 ரன்களும், புஜாரா 18 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.