இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு: பாகிஸ்தான் அபார ஆட்டம்!

இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு: பாகிஸ்தான் அபார ஆட்டம்!


Caston| Last Modified ஞாயிறு, 18 ஜூன் 2017 (18:58 IST)
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் இந்தியாவுக்கு பாகிஸ்தான் 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.

 
 
பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி நடத்தும் போட்டியில் இறுதியாட்டத்தில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 
இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அசர் அலி மற்றும் ஃபகர் சமன் களமிறங்கினர். இந்த ஜோடி பாகிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 128 ரன் எடுத்தது. இவர்களை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர்.
 
59 ரன் எடுத்திருந்த அசர் அலி ரன் அவுட் ஆகி வெளியேற அடுத்ததாக பாபர் அசாம் களமிறங்கினார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஃபகர் சமன் தனது அதிரடியை தொடர 92 பந்து சதத்தை கடந்தார் அவர். இறுதியில் 106 பந்துகளில் 114 ரன் எடுத்து பாண்டியா பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஃபகர் சமன் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் அணியின் எண்ணிக்கை 33.1 ஓவரில் 200 ரன்னாக இருந்தது.
 
இதனையடுத்து அனுபவ வீரர் மாலிக் களமிறங்கினார். மாலிக் 12 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பாபர் அசாம் 46 ரன்னில் வெளியேறினார். இறுதியாக முகமது ஹஃபீஸ் மற்றும் இமாத் வாசிம் களத்தில் நின்றனர். இறுதியில் ஹஃபிஸும் அதிரடியாக விளையாட அவர் 37 பந்துகளில் 57 ரன் எடுத்தார். இமாத் வாசிமும் தன் பங்கிற்கு 25 ரன் எடுத்தார்.
 
இறுதியாக பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 338 ரன் குவித்து இந்திய அணிக்கு 339 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், பாண்டியா, ஜாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் களம் இறங்க உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :