வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (16:14 IST)

மெக்கல்லத்தை கோப்பையுடன் வழியனுப்பியது நியூசிலாந்து; ஆஸி.யை வீழ்த்தி சாதனை

மெக்கல்லத்தை கோப்பையுடன் வழியனுப்பியது நியூசிலாந்து; ஆஸி.யை வீழ்த்தி சாதனை

ஆஸ்திரேலியாவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மெக்கல்லத்தை கோப்பையுடன் வழி அனுப்பி வைத்துள்ளது.
 

 
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஹாமில்டனில் உள்ள செடோன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்தது.
 
தனது கடைசிப் போட்டியில் விளையாடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் 27 பந்துகளில் [6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 47 ரன்களும், மார்டின் கப்தில் 59 [4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்தனர்.
 
பின்னர் வந்த கனே வில்லியம்சன், ஹென்றி நிகோலஸ் ஆகியோர் தலா 18 ரன்கள் எடுத்து வெளியேறினர். அடுத்து வந்த கிராண்ட் எல்லியாட் அரைச்சதம் எடுத்தும், கோரி ஆண்டர்சன் 27 ரன்கள் எடுத்தும் வெளியேறினர்.
 
பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில், அதாவது, கடைசியாக களமிறங்கிய 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட், ஜான் ஹாஸ்டிங்ஸ், ஸ்காட் போல்ண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய வீரர்களை நியூசிலாந்து வீரர்கள் மிரட்டினர். தொடக்க வீரர் டேவிட் வார்னர் 16 ரன்களில் ஹென்றி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கவாஜா 44 ரன்களிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 21 ரன்களிலும், ஜார்ஜ் பெய்லி 33 ரன்களிலும் வெளியேறினர்.
 
இதனால், 94 ரன்களுக்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா அணி தத்தளித்தது. பின்னர் வந்த வீரர்களில் மிட்செல் மார்ஷ் மட்டும் 41 ரன்கள் எடுத்தார். இதனால், ஆஸ்திரேலியா அணி 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
இதனால், 55 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், கோரி ஆண்டர்சன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் வித்தியாசத்திலும், 2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இரு நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை 2007ஆம் ஆண்டிற்கு பிறகு இப்பொழுதுதான் நியூசிலாந்து அணி வென்றுள்ளது.