வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2016 (15:41 IST)

எனது விக்கெட்டை இழந்ததே தோல்விக்கு முக்கிய காரணம் - தோனி

எனது விக்கெட்டை இழந்தது திருப்பு முனையாக அமைந்து விட்டது என்று இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.
 
ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், நேற்று 4ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
 

 
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில், 37.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
 
மேற்கொண்டு 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறி தோல்வியை துவக்கி வைத்தார்.
 
தொடர்ந்து வந்த வீரர்களில் ஜடேஜா [24] தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
தோல்வி குறித்து கூறிய தோனி, “எனது விக்கெட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஏனென்றால், அந்த நிலையில், ஆட்டத்தை இனிதாக நிறைவு செய்யும் பணியை சிறப்பாக செய்திருக்க வேண்டும். அதனை தொடர்ந்து சில விக்கெட்டுகளை இழந்ததும் காரணம்.
 
அழுத்தத்தோடு ஆடும்போது இதுதான் நிகழும். அணியில் உள்ள வீரர்களில் சிலர், நிறைய சர்வதேச போட்டிகள் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். இந்த நேரத்தில் நடுகள வீரர்கள் பெரிய ஷாட்களை அடித்து ஆடவதுதான் சரியானது.
 
ரஹானே காயமடைந்ததும் ஒரு காரணியாக அமைந்துவிட்டது. அவருடைய விரல்களில் தையல் போடப்பட்டதோடு, மயக்க மருந்தும் அளிக்கப்பட்டது. அதனால், சிறிது நேரம் காத்திருந்து பின்  வரிசையில் களமிறங்க வேண்டியதாகிவிட்டது” என்று கூறியுள்ளார்.