1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 7 செப்டம்பர் 2016 (04:24 IST)

அட்ரா சக்கை!.... டி20இல் 263 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா உலக சாதனை

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 263 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.
 

 
இலங்கை-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி கண்டி பலேகலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி முதலில் களமிறங்கியது.
 
கேப்டன் டேவிட் வார்னர் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக உஸ்மான் கவாஜா 36 ரன்களில் வெளியேறினார். ஆனால், தொடக்க ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
 
27 பந்துகளில் அரைச்சதம் கடந்த மேக்ஸ்வெல், 49 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இறுதிகட்டத்தில் இணைந்த ட்ராவிஸ் ஹெட் 18 பந்துகளில் 45 ரன்கள் [3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] எடுத்தார். இறுதிவரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 65 பந்துகளில் [9 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள்] 145 ரன்கள் எடுத்தார்.
 
அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து 85 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக கேப்டன் சண்டிமால் 58 ரன்களும், கபுகேதரா 43 ரன்களும் எடுத்தனர்.
 
தொடக்க வீரர்கள் குசல் பெரேரா, தில்ஷன் உட்பட 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
சாதனைகள்:
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி குவித்த 263 ரன்களே டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் ஆகும். முன்னதாக, கென்யா அணிக்கு எதிராக இலங்கை அணி குவித்த 260 ரன்களே அதிகப்பட்சமாக இருந்தது.
 
அதேபோல், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் எடுத்த 145 ரன்களே ஒரு இன்னிங்ஸில் தனிநபர் ஒருவரின் இரண்டாவது அதிகப்பட்சமாகும். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் உள்ளார். இவர் 156 ரன்கள் எடுத்துள்ளார்.
 
ஒரு அணியில் தொடக்க வீரர்கள் 50 மற்றும் அதற்கு மேல் எடுத்த முதல் அணி என்று சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது. இதுவரை 4 தொடக்க வீரர்கள் 50 மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். மேக்ஸ்வெல் 145* மார்டின் 96, வார்னர் 89, வொய்ட் 75 ஆகியோர் ஆவர்.