இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது இந்தியா!

இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கம்பீரமாக நுழைந்தது இந்தியா!


Caston| Last Modified புதன், 2 மார்ச் 2016 (11:42 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

 
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக கபுகேந்திரா 30 ரன்களும், சிறிவர்தனா 22 ரன்களும் எடுத்தனர். இந்த தொடரில் சிறப்பாக பந்துவீசி வரும் இந்திய வீரர்கள் இந்த போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி அசத்த்தினர்.
 
பும்ரா, பண்டியா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நான்கு ஓவர்கள் வீசிய நெஹ்ரா 23 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
 
139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் வழக்கம் போல் ஏமாற்றினார். ரோகித் ஷர்மா 15 ரன்னில் வெளியேற இந்திய அணி 16 ரன்னில் 2 விக்கெட்டை இழந்து இருந்தது. பின்னர் களமிறங்கிய கோஹ்லி, ரெய்னா ஜோடி சிறந்து பங்களிப்பை அளித்தது. ரெய்னா 25 ரன்னில் விக்கெட்டை இழக்க, யுவராஜ் களம் புகுந்தார். யுவராஜின் அனல் பறக்கும் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி எளிமையானது.
 
18 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரியுடன் 35 ரன்குவித்து யுவராஜ் ஆட்டமிழந்தார். 19.2 ஓவரில் இந்திய அணி 142 ரன் குவித்து வெற்றி பெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் விராட் கோஹ்லி இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 56 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
 
56 ரன் எடுத்த விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருதை பெற்றார். 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி, கம்பீரமாக முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :