இந்தியா 500 ரன்கள் குவிப்பு - ராகுல், ரஹானே அபார சதம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (05:17 IST)
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ராகுல் மற்றும் ரஹானே இருவரின் அபார சதத்தால் இந்தியா 500 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
 
 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிராத்வெய்ட் [1], டேரன் பிராவோ [0], சந்திரிகா [5] என அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
 
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்களுக்குள் முக்கிய 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர், களமிறங்கிய பிளாக்வுட் 62 ரன்களிலும், சாமுவேல்ஸ் 37 ரன்களிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் எடுத்தது.
 
இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, மொஹமது ஷமி இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷிகர் தவான் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். புஜாரா 46 ரன்களில் வெளியேறினார். கே.எல்.ராகுல் 96 ரன்கள் எடுத்திருந்தபோது அபாரமாக சிக்ஸர் விளாசி சதம் அடித்தார். பின்னர், 158 ரன்கள் [3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்] எடுத்து வெளியேறினார்.
 
பின்னர், கேப்டன் விராட் கோலி 44 ரன்களிலும், அஸ்வின் [3], விருத்திமான் சஹா [47], அமித் மிஸ்ரா [21] என அடுத்தடுத்து வெளியேறினாலும், ரஹானே தனது அபார இன்னிங்ஸை விளையாடினார்.
 
கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஹானே 108 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 500 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
 
இதனால், இந்திய அணி 304 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இன்னிங்ஸ் வெற்றிபெற வாய்ப்புள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :