செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (19:15 IST)

ஸ்ரீசாந்த் வாழ்க்கையில் விளையாடும் சூதாட்ட வழக்கு

சூதாட்ட வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி காவல் துறையினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
 

 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்தும், அவரது சக விளையாட்டு வீர்ர்களான அஜித் சண்டிலா மற்றும் அங்கீட் சவான் ஆகியோர் மீது கடந்த 2013ஆம் ஆண்டு சூதாட்டம் மற்றும் ஏமாற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
 
மேலும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகீம், அவருக்கு நெருக்கமான சோட்டா ஷகில் ஆகியோர் ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தை பின்னால் இருந்து இயக்கினார்கள் என்று டெல்லி காவல் துறையினர் குற்றப் பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர்.
 
தாம் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று இந்த மூன்று வீர்ர்களும் வலியுறுத்தி வந்தனர். இவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் போதாது என்று கூறிய நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை 25-07-15 சனிக்கிழமை அன்று விடுவித்தது.
 
ஆனால், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை தொடரும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ அறிவித்தது.
 
இந்நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரின் விடுதலையை எதிர்த்து காவல் துறையினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். குற்றச்சாட்டில் இருந்து விடுவித்ததில் பல்வேறு தவறுகள் இருப்பதாக மனுவில் டெல்லி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.