வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 1 ஏப்ரல் 2015 (15:52 IST)

உலகக்கோப்பை உரசல்: ஐசிசி தலைவர் பதவியிலிருந்து முஸ்தபா கமால் பதவி விலகல்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் பதவி விலகியுள்ளார்.
 
கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் இடையிலான காலிறுதிப் போட்டியின்போது, வங்கதசே வீரர் ரூபெல் ஹுசைன் வீசிய பந்தை தூக்கி அடித்தபோது அது கேட்ச் ஆனது.
 

 
பந்து இடுப்புக்கு மேலே புல் டாஸாக போனதால் அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தை லெக் அம்பயர் ஆலிம் தர் நோ பால் என்று அறிவித்ததை அடுத்து நேர் முனையில் நின்று கொண்டிருந்த அம்பயர் இயான் கோல்டும் நோ பால் என்று அறிவித்தார்.
 
இதனால் 90 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா கண்டத்திலிருந்து தப்பினார். அதோடு அந்த இன்னிங்க்ஸில் 137 ரன்களையும் ரோஹித் சர்மா குவித்தார். இது ஆட்டத்தின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
 
இந்நிலையில், ஐசிசி தலைவரும், வங்கதேசத்தின் திட்டத்துறை அமைச்சருமான முஸ்தபா கமால் ஐசிசி இந்திய கிரிக்கெட் கவுன்சிலாக மாறிவிட்டதாக கூறி, ஐசிசி தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருந்தார்.
 
மேலும், ஐசிசி இந்தியன் கிரிக்கெட் கவுன்சில்போல் ஆகி விட்டது என்றும் ஐசிசி, ஐசிசியாக இருந்தால் என்னால் செயல்பட முடியும். ஆனால், அது இந்தியன் கிரிக்கெட் கவுன்சிலாகி விட்ட பிறகு அதில் என்னால் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார். இது தவிர, உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழாவையும் புறக்கணித்தார்
 
இந்நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து முஸ்தபா கமால் பதவி விலகியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முஸ்தபா கமால், “நான் எனது பதவி விலகல் கடிதத்தை ஐசிசியிடம் அனுப்பி வைத்துள்ளேன்.
 
என்னால் ஐசிசியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட முடியவில்லை. மேலும், ஐசிசியின் சட்ட திட்டங்களை தாண்டியும் என்னால் அவர்களுக்கு வேலைசெய்ய முடியாது” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் குறிப்பிடுகையில், “உலகக்கோப்பையை வழங்க என்னை அனுமதிக்கவில்லை. இதனால் இரவு முழுதும் எனக்கு உறக்கம் வரவில்லை. ஏனெனில் நான் எனது தேசத்தின் பிரதிநிதி” என்றும் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார்.