இலங்கையை ’வொயிட் வாஷ்’ செய்து கோப்பையை கைப்பற்றியது இந்திய பெண்கள் அணி


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (17:39 IST)
இலங்கையுடான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய பெண்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது.
 
 
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதன் முதல் போட்டியில் 107 ரன்களிலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்றிருந்தது.
 
இந்நிலையில், 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக திலனி மனோதர சுரங்கிகா 23 ரன்களும், கேப்டன் பிரசதனி வீரக்கோட்டி 19 ரன்களும், ஹன்சிமா கருனரத்னே 17 ரன்களும் எடுத்தனர்.
 
இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 9.2 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷிகா பாண்டே மற்றும் ப்ரீத்தி போஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் பூனம் ராத் [0], ஸ்மிருதி மந்தனா [6] என அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வேதா கிருஷ்ணமூர்த்தியும், தீப்தி சர்மா இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். தீப்தி சர்மா 28 ரன்களில் வெளியேறினார்.
 
இறுதியாக இந்திய அணி 29.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வேதா கிருஷ்ணமூர்த்தி 61 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
 
ஆட்ட நாயகி விருது 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. தொடர்நாயகி விருதினை இந்தியாவின் ப்ரீத்தி போஸ், மற்றும் இலங்கையின் ஹன்சிமா கருனரத்னே இருவரும் பெற்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :