வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2016 (17:41 IST)

ஆஸ்திரேலியாவை பந்தாடியது இந்தியா: திக்திக் கடைசி கட்டம்

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.


 
 
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வாட்சனின் அபாரமான ஆட்டத்தில் இந்திய அணிக்கு 198 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. வாட்சன் 124 ரன் குவித்தார்.
 
பின்னர் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஆரம்ப முதலே அபாரமாக விளையாடினர். ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்தனர். 46 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி 2வது விக்கெட்டை 124 ரன்னில் இழந்தது.
 
ஷிகர் தவான் 18 பந்தில் 26 ரன்னும், ரோகித் சர்மா 38 பந்தில் 52 ரன்னும் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோஹ்லி இந்த ஆட்டத்திலும் 36 பந்தில் 50 ரன் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
கடைசி கட்டத்தில் யுவராஜ், ரெய்னா கூட்டணி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. பரபரப்பான கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. முதல் இரண்டு பந்துகளை யுவராஜ் பவுண்டரி சிக்சர் என பறக்க விட, 3 வது பந்தில் 1 ரன் எடுத்தனர். 3 பந்துகளில் இந்திய அணிக்கு 6 ரன் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு பந்துகளில் 4 ரன் சேர்த்த இந்திய அணிக்கு கடைசி 1 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் ரெய்னா அற்புதமாக பவுண்டரி அடிக்க இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றது.
 
ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியிருந்தது. கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் இந்தியா சூரையாடியுள்ளது.
 
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 124 ரன் குவித்த ஆஸ்திரேலியாவின் வாட்சனுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது இந்தியாவின் விராட் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது.