வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2015 (17:50 IST)

ராயுடு அபார சதம்; பின்னி 77: முதலில் பேட் செய்த இந்திய அணி 255 ரன்கள்

ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 87/5 என்ற நிலையிலிருந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.
 

 
கடும் நெருக்கடியில் இறங்கிய ராயுடு சிரமம் எதுவும் இல்லாமல் மிகவும் லாவகமாக ஆடி 133 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 124 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ, ஸ்டூவர்ட் பின்னி 76 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 77 ரன்கள் சேர்க்க, இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 160 ரன்களை சுமார் 24 ஓவர்களில் சேர்க்க சரிவிலிருந்து இந்திய அணி மீண்டது.
 
டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்பரா முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். கேப்டன் ரஹானேயும், முரளி விஜய்யும் களமிறங்கினர். விஜய் 9 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்த நிலையில் இடது கை ஸ்விங் பவுலர் விட்டோரியிடம் அவுட் ஆனார். மிகச் சாதாரணமான இடது கை ஸ்விங் பவுலரின் வெளியே செல்லும் பந்து, அதனை சாதாரணமாக விட்டுவிடுவார் விஜய், இங்கு சபலம் தட்ட அதனை தொட்டார் 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. 4வது ஓவரில் அம்பத்தி ராயுடு வந்துதான் முதல் பவுண்டரியே வந்தது. இடையே பன்யாங்கரா தனது கோணத்தால் ரஹானேயை தொடர்ந்து இன்ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர் குழப்பத்தில் ஆழ்த்தி தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.
 
கடைசியில் ஒரு ஓவர் பிட்ச் பந்தில் விட்டோரியை நேராக பவுண்டரி அடித்தார் ரஹானே. சரியான முறையில் சுறுசுறுப்பாக ஆட முடியாத இந்திய அணி 10 ஓவர்களில் 32/1 என்று இருந்தது. அதன் பிறகு ரஹானே 49 பந்துகளீல் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கல் எடுத்திருந்த போது திரிபானோ வீசிய ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை, தேர்ட்மேனில் தட்டி விட நினைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மீண்டும் ஒரு கடின உழைப்புடன் தொடங்கிய ரஹானே பாதியில் கோட்டைவிட்டார்.
 
மனோஜ் திவாரி, இவர் வாய்ப்புக்காக ஏங்கியவர், ஆனால் 14 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிபாபா பந்தில் எல்.பி.டபியூ. ஆனார். அடுத்த ஓவரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராபின் உத்தப்பா சிங்கிளை கணிக்க முடியாமல் டக் அவுட் ஆனார். அவர் விட்டோரி பந்தை ஷார்ட் கவரில் தட்டி விட்டு விரைவு சிங்கிளை எடுக்க நினைத்தார், ஆனால் சிகந்தர் ரசா வலது புறம் துரிதமாக நகர்ந்து பந்தை நேராக ஸ்டம்பில் அடிக்க ரன்னர் முனையில் உத்தப்பா ரன் அவுட்.
 
கேதர் ஜாதவ் ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்து கிரீசில் நின்ற படியே சிபாபா பந்தை கட் செய்ய முயன்றார், எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். 87/5 என்ற நிலையில் ராயுடுவுடன் ஸ்டூவர்ட் பின்னி சேர்ந்தார்.
 
87/5 என்ற நிலையில் அணியை மீட்டெடுக்க பின்னி, ராயுடு இணைந்தனர். ராயுடு ஏற்கெனவே நன்றாக ஆடி வந்தார், அவருக்கு ஜிம்பாப்வே பந்து வீச்சு ஒன்றும் பெரிய கஷ்டத்தைக் கொடுக்கவில்லை.
 
72 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார் ராயுடு. 34வது ஓவரில் கிரீமர் வீசிய ஓவரில் ஸ்டூவர்ட் பின்னி மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்ஸ் அடித்து தன்னம்பிக்கையை எட்டினார். பன்யங்காராவையும் மேலேறி வந்து ஒரு பவுண்டரி அடித்தார்.
 
பிறகு 63 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் பின்னி அரைசதம் எடுத்தார். அதே ஓவரில் பன்யன்ங்கராவின் பந்தை சக்தி வாய்ந்த ஸ்லாக் ஸ்வீப் மூலம் சிக்சர் அடித்து 96 வந்த ராயுடு அடுத்து பவுண்டரி அடித்து 117 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதம் கண்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது 2வது சதமாகும் இது.
 
பின்னி மேலும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து, 77 ரன்களில் இருந்த போது டிவில்லியர்ஸ் பாணியில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒதுங்கிக் கொண்டு ஒரு சுழற்று சுழற்றினார் பந்து எட்ஜில் பட்டு கேட்ச் ஆக வெளியேறினார். 6வது விக்கெட்டுக்காக 160 ரன்களைச் சேர்த்து, ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறந்த 6வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்தியா 255 ரன்கள் எடுத்தது.
 
ஜிம்பாப்வேயில் சிபாபா 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன்களுடன் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
 
256 ரன்கள் வெற்றி இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியுள்ளது.