1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2015 (14:10 IST)

இலங்கை சுழலில் சிக்கி சின்னாபின்னாமானது இந்திய அணி; 63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

 
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில், 183 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.
 
ஒரு கட்டத்தில், 60 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இலங்கை அணியை, அந்த அணியின் கேப்டன் மேத்யூஸ் மற்றும் விக்கெட் கீப்பர் சண்டிமால் இருவரும் அணி கவுரமான எண்ணிக்கையை எட்ட உதவினர். மேத்யூஸ் 64 ரன்களும், சண்டிமால் 59 ரன்களும் எடுத்தனர்.
 

 
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, வருண் ஆரோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர், களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 375 ரன்கள் குவித்து 192 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில், ஷிகர் தவான் 271 பந்துகளில் 13 பவுண்டரிகளிடன் 134 ரன்கள் எடுத்தார்.
 
இதனையடுத்து, கேப்டன் விராட் கோலியும் 191 பந்துகளில் 11 வுண்டரிகளுடன் 103 ரன்களும், விருத்திமான சஹா 120 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் தரிந்து கௌசல் 5 விக்கெட்டுகளையும், நுவன் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணரத்னே மற்றும் கௌசல் சில்வா இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால், ஒரு ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
 
பின்னர், சங்ககராவும் கேப்டன் மேத்யூசும் இணைந்து 87 ரன்கள் குவித்தனர். சங்ககரா 40 ரன்களிலும், மேத்யூஸ் 39 ரன்களிலும் வெளியேறினர். இலங்கை அணி ஒரு கட்டத்தில் 95 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இதனால், இன்னிங்ஸ் தோல்வியடையும் என்றே அனைவரும் கருதினர்.
 

 
ஆனால், அதற்குப் பிறகு களமிறங்கிய தினேஷ் சண்டிமால், ஒருநாள் போட்டி போல அதிரடியாக விளையாடினார். அவர் 100 பந்துகளில் [11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 100 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்கபலமாக திரிமன்னே 44 ரன்களும், முபாரக் 49 ரன்களும் குவித்தனர்.
 
இறுதியில் இலங்கை அணி தனது 2ஆவது இன்னிங்ஸில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசிவரை களத்தில் நின்ற தினேஷ் சண்டிமால், 169 பந்துகளில் [19 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 162 ரன்கள் எடுத்தார்.
 
இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 

 
பின்னர், 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியை இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் சின்னாபின்னாமாக்கினர். ராகுல் (5), தவான் (28), இஷாந்த் சர்மா (10), ரோஹித் சர்மா (4), விராட் கோலி (3) என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் வெளியேறினர்.
 
ரஹானே மட்டும் ஆறுதலாக 36 ரன்கள் குவித்தார். அவரும் வெளியேற இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி தனது 2ஆவது இன்னிங்ஸில் 49.5 ஓவர்கள் விளையாடி 112 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 63 ரன்கள் வித்தியாசத்தில்ட் தோல்வியை தழுவியது.
 
இலங்கை தரப்பில் ஹெராத 7 விக்கெட்டுகளையும், தரிந்து கௌசல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருது 162 ரன்கள் குவித்த தினேஷ் சண்டிமாலுக்கு வழங்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.