வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 10 மே 2016 (13:41 IST)

தோனி இனியும் கேப்டனாக நீடிக்க வேண்டுமா? - முன்னாள் கேப்டன் கங்குலி கேள்வி

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி, இனியும் அந்த பதவியில் நீடிக்க வேண்டுமா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
 

 
தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, தற்போது போதாத காலம் வந்துவிட்டதுபோல். தொடர்ந்து பத்திரிக்கையாளர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் அவரது ஓய்வு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதற்கு பிறகு, பெரிய வெற்றிகளை இந்திய அணி பெறவில்லை என்றே சொல்லலாம்.
 
2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கான்பூரில் அனில் கும்ளே இல்லாத காரணத்தினால் பொறுப்பு கேப்டனாக செயலாற்றிய தோனி, அதன் பிறகு ஆஸ்திரேலியா அணியின் இந்தியப் பயணத்தின் போது மொஹாலியில் கேப்டன் பொறுப்பு வகித்தார். அனில் கும்ளே ஓய்வு பெற்றதையடுத்து முழு நேர டெஸ்ட் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார்.
 
ஆனால், 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே ஆஸ்திரேலியவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்ததை அடுத்து தனது ஓய்வை அறிவித்தார். ஆனால், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நீடித்து வருகிறார்.
 
ஆனால், அதன் பிறகு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறியது. தற்போது நடைபெற்ற டி 20 உலகக்கோப்பை போட்டியிலும், அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
இந்நிலையில், ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தோனி கேப்டனாக நீடிப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது குறித்து கூறியுள்ள அவர், “ஒவ்வொரு கிரிக்கெட் அணியும் அதன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் திட்டமிடும். என்னுடைய கேள்வி என்னவென்றால் மூன்று, நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து சரிவை சந்தித்துக்கொண்டு இருக்கும் தோனி இனியும் கேப்டனாக நீடிக்க வேண்டுமா?
 
தோனி இதுவரை கேப்டன் பணியை சிறப்பாக செய்து வந்திருக்கிறார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பின் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை கருத்தில் கொண்டால், தோனி அதற்கு தகுதியாக இருக்க வேண்டும்.
 
நான் அவரை ஓய்வுபெற வேண்டும் என்று கூறவில்லை. அவர் குறைந்த வடிவிலான போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.