வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 3 டிசம்பர் 2014 (12:11 IST)

”உலக கோப்பையில் என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கையும், கனவும் இருக்கிறது” - சேவாக்

உலக கோப்பையில் என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கையும், கனவும் இருக்கிறது என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 
அடுத்த வருடம் (2015) நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. இந்த உலக கோப்பையின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது.
 
இதில் கலந்து கொண்டு பேசிய வீரேந்திர சேவாக், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியில் எனது பெயர் இடம் பெறும் என்று நம்புகிறேன்.
 

 
எல்லா கிரிக்கெட் வீரர்களும் தனது நாட்டு அணிக்காக உலக கோப்பை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இந்த உலக கோப்பை போட்டியில் என்னால் விளையாட முடியும் என்ற நம்பிக்கையும், கனவும் இன்னும் எனக்கு இருக்கிறது.
 
நமது அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நமது அணியால் உலக கோப்பையை நிச்சயம் தக்கவைக்க முடியும்.

கிரிக்கெட் ஆடுவதற்கு ஆஸ்திரேலியா சிறந்த இடமாகும். இங்குள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். அதே சமயம் பந்து அருமையாக பேட்டுக்கு வரும். அதனால் உற்சாகமாக பேட்டிங் செய்யலாம். உலக போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விளையாடுவதால் நமது வீரர்கள் அங்குள்ள சூழ்நிலையை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியும்.
 
பவுன்சருக்குத் தடை விதித்தால் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக மாறிவிடும்:
 
சில தினங்களுக்கு முன்பு, ‘பவுன்சர்’ பந்தை புல்ஷாட் ஆட முயற்சித்த ஆஸ்திரேலிய அணி வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்து தாக்கி மரணம் அடைந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. அதேநேரத்தில் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு அங்கம் தான். எந்தவொரு விளையாட்டிலும் காயங்கள் ஏற்படுவது சகஜம் தான். சில சமயங்களில் மரணமும் நிகழக்கூடும்.
 

 
பவுன்சராக வரும் பந்தை நாம் குனிந்து தவிர்க்க முடியும். அது பேட்ஸ்மேன்களை பொறுத்த விஷயமாகும். பவுன்சர் பந்து வீச்சுக்கு தடை விதித்தால் கிரிக்கெட்டில் எந்த வித சுவாரசியமும் இருக்காது. பவுன்சருக்கு தடை விதித்தால் பிறகு அது பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக மாறிவிடும்.
 

 
பவுன்சருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. எகிறி வரும் (பவுன்சர்) பந்துகள் தாக்கிய அனுபவம் எனக்கும் உண்டு. பலமுறை எனது ஹெல்மெட்டை பவுன்சர் பந்து பதம் பார்த்து இருக்கிறது. பவுன்சருக்கு தடை விதித்தால் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு ஆயுதமும் இல்லாத நிலை ஏற்படும். போட்டியிலும் ஆர்வம் இருக்காது” என்று கூறியுள்ளார்.