வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2016 (13:45 IST)

”சென்னை அணியை என்னால் மறக்க முடியாது” - தோனி உருக்கம்

”சென்னை அணியை என்னால் மறக்க முடியாது” - தோனி உருக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகி புதிய அணியில் இணைந்துள்ளதால் உற்சாகமாக இருப்பதாக கருத முடியாது என்று இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.


 
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
 
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 2 ஆண்டு காலம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
 
இதனையடுத்து, புதிதாக இரண்டு அணிகளை இணைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனடிப்படையில், புனே, ராஜ்கோட் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டன. இதில் புனே அணியின் தலைவராக டோனி செயல்படுகிறார். அந்த அணிக்கு ரைசிங் புனே சூப்பர்ஜியண்ட்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜியண்ட்ஸ் அணியின் சீருடை அறிமுக செய்யும் விழா நடைபெற்றது.
 
இந்த விழாவில் சீருடையை அறிமுகப்படுத்தி பேசிய டோனி, "புதிய அனியில் விளையாட உள்ளதால், மிகவும் உற்சாகமாக உள்ளேன் என்று நீங்கள் விரும்பினால், அது பொய்யாகவே இருக்கும். சென்னை அணியிலிருந்து விலகிச்சென்றுவிட்டதாக சொன்னால் அதுவும் பொய்யே.
 
ஒரு மனிதனாக எனக்கு சென்னை காலக்கட்டம் ஒரு சிறப்பான பகுதியாக இருந்தது. 8 ஆண்டுகளாக ஆடிய அணியுடன் உணர்ச்சிமயமான தொடர்பு இருக்க தான் செய்யும். 8 ஆண்டுகள் அந்த அணியில் ஆடிவிட்டு மற்றொரு அணிக்காக ஆடுவது நிச்சயம் வித்தியாசமானது தான்.
 
எனவே உடனடியாக புதிய அணிக்கு விளையாடுவது எனக்கு உற்சாக மூட்டுகிறது என்று நான் கூறினால் அது சென்னை அணி மீதும், எங்கள் மீது அன்பையும், பாசத்தையும் காட்டிய ரசிகர்கள் மீதும் உரிய மரியாதை செலுத்தவில்லை என்றாகிவிடும்.
 
வாழ்க்கை ஒன்றும் கரும்பலகை கிடையாது. உங்களது பழைய நினைவுகளை அழித்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்கிவிட முடியாது.
 
நாங்கள் நிறைய வீரர்களை இழந்துள்ளோம். நாங்கள் 8 ஆண்டுகள் ஒன்றாக விளையாடினோம். ஒரு தொழில்முறை விளையாட்டு வீரராக என்னை தெரிவு செய்த புனே அணிக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.