”சங்ககராவுடன் இணைந்து விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்” - உணர்ச்சி வசப்பட்ட மகிளா ஜெயவர்தனே


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2015 (17:21 IST)
சங்ககராவுடன் இணைந்து விளையாடியதை பெருமையாக கருதுகிறேன் என்று இலங்கை அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்தனே உணர்ச்சிப் பெருக்குடன் கூறியுள்ளார்.
 
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. நடைபெறவுள்ள இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் இலங்கை வீரர் குமார் சங்ககரா ஓய்வுபெற இருக்கிறார். சங்ககரா ஒருநாள் போட்டிகளில் 14ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும், டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரன்களையும் குவித்துள்ளார்.
 
இந்நிலையில் சங்ககரா குறித்து பேசிய ஜெயவர்தனே, “நான் நேரடியாகவே விஷயத்திற்கு வருகிறேன். இலங்கை அணி இதுவரைப் பார்த்திராத சிறந்த பேட்ஸ்மேன் குமார் சங்ககரா. நான் உட்பட பெரும்பாலான இலங்கை வீரர்களுக்கு, அரவிந்த டி சில்வா எப்போதும் உணர்பூர்வமாக பிடித்த வீரராக இருக்கிறார்.
 

 
ஆனால், சங்ககரா தனிப்பட்ட முறையில் பல சாதனைகளை புரிந்திருக்கிறார். அறுபதுக்கும் மேற்பட்ட [38 டெஸ்ட் மற்றும் 25 ஒருநாள்] சதங்களை எடுத்துள்ளார். மேலும், மலைவைக்கும் வகையில் எண்ணற்ற ரன்கள் குவித்துள்ளார்.
 
சங்ககரா எந்த வகையாக சூழலிலும், எவ்வித தாக்குதலையும் மிகச்சிறந்த முறையில் எதிர்கொண்டு ரன்கள் குவித்துள்ளார். அவருடைய பவுண்டரி அடிக்கும் முறையும், இலக்கைத் துரத்தும் முறையும் அடுத்துவரும் இலங்கை கிரிக்கெட் தலைமுறையினருக்கு உதவும்.
 
சங்ககரா ஒரு ஆகச்சிறந்த வீரர். அவர் விட்டுச்செல்லும் வெற்றிடத்தை நிரப்புவதற்கும் இன்னும் சில காலங்கள் ஆகும். அவரைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி முழுவதுமே பாக்கியம் பெற்றதாக நான் நம்புகிறேன். குமார் சங்ககரா போன்ற ஒரு சாம்பியனுடன் நீண்டகாலம் விளையாடியதை பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :