வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 21 பிப்ரவரி 2016 (10:01 IST)

உலக சாதனை படைத்தது தர்மசங்கடமாக இருக்கிறது - உருகும் மெக்கல்லம்

உலக சாதனை படைத்தது தர்மசங்கடமாக இருக்கிறது - உருகும் மெக்கல்லம்

மேற்கிந்திய ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடித்தது தர்மசங்கடமாக இருக்கிறது என்று அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.
 

 
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில், தனது கடைசி சர்வதேசப் போட்டியை விளையாடும் அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
 
இதற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பாகிஸ்தானின் மிஸ்பா உல்-ஹக் இருவரும் தலா 56 பந்துகளில் சதத்தை எட்டியிருந்தனர். இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. இறுதியில், 79 பந்துகளில் [21 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்] 145 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
பின்னர் தனது குறித்து கூறிய மெக்கல்லம், ‘‘எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தையும் சிக்சர் அல்லது பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்தேன். மைதானத்தில் உள்ள மெகாதிரையில் காண்பிக்கும் வரை, உலக சாதனை படைத்தது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். அது ஒன்றுதான் இங்கு முக்கியமான விஷயம்.
 
விவியன் ரிச்சர்ட்ஸ் தான் இளம் வயதில் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். இப்போது அவரது சாதனையை முறியடித்திருப்பது சந்தோஷமான விஷயம். ஆனால், தர்மசங்கடமாகவே இருக்கிறது.
 
விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடிக்கு பேர்போனவர். வியக்கத்தக்க கிரிக்கெட் ஆட்டக்காரர். நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், அவரின் சாதனையை கடந்து சென்றது எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.