1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 2 டிசம்பர் 2014 (12:38 IST)

முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் சாய்த்து வங்கதேச வீரர் உலக சாதனை

வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் தனது முதல் அறிமுக ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
 
22 வயதாகும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான தைஜுல் இஸ்லாம், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கினார்.
 
ஜிம்பாப்வே அணி 26ஆவது ஓவரில் 120/5 என்ற நிலையில் ஆடிக்கொண்டிருந்தது. 27-வது ஓவரை வீச தைஜுல் இஸ்லாம் அழைக்கப்பட்டார். அவர் சாலமன் மைர் என்பவரை அந்த ஓவரின் முதல் பந்தில் எல்.பி.டபள்யூ முறையில் வெளியேற்றினார்.
 

 
அதே ஓவர் கடைசி பந்தில் பன்யாங்கராவை போல்டாக்கினார். பிறகு 29ஆவது ஓவரின் முதல் பந்தில் நயம்புவை எல்.பி.டபள்யூ முறையிலும், 2ஆவது பந்தில் சடாராவை போல்ட் செய்தும் வெளியேற்றினார்.
 
இதன் மூலம், கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை தைஜூல் இஸ்லாம் பெற்றார்.
 
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஹாட்ரிக் எடுக்கும் 4ஆவது வங்கதேச பவுலர் என்ற பெருமையையும் தைஜுல் இஸ்லாம் பெற்றார். இதற்கு முன்பு ஷஹாதது ஹுசைன், அப்துர் ரசாக், மற்றும் ரூபல் ஹுசைன் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
 

 
இறுதியாக ஜிம்பாப்வே அணி 30 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் குவித்தது. அந்த அணி கடைசி 33 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. 
 
பின்னர் 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 24.3 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
 
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் வங்கதேச அணி கோப்பையைக் கைப்பற்றியது.