ஹர்திக் பாண்ட்யாவைப் பார்த்து எனக்கு பயமாக உள்ளது… கபில்தேவ் பகிர்ந்த தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்ட்யா சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடாமல் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் கடந்த சில மாதங்களாக டி 20 அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்றவருமான கபில்தேவ் ஹர்திக் பாண்ட்யா பற்றி பேசும்போது “ஹர்திக் பாண்ட்யாவின் உடல் பிட்னெஸ் குறித்து நான் எப்போதும் அச்சப்படுவேன். ஏனென்றால் அவர் எளிதாக காயமடைந்து விடுவார்.” எனக் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட ஹர்திக் பாண்ட்யா கடந்த ஆண்டு மீண்டும் அணிக்குள் திரும்பினார். கடந்த ஆண்டு அவர் தலைமை தாங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. இப்போது இந்திய அணியில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் இந்திய அணிக்கு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நிரந்தரக் கேப்டனாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது.