வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (08:54 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரையும் கேப்டனையும் நீக்க வேண்டும்: வலுக்கிறது எதிர்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பிளட்சர், கேப்டன் டோனி ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வற்புறுத்தி உள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 1–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

4 ஆவது மற்றும் 5ஆவது டெஸ்டில் இந்திய அணி 3 ஆவது நாளுக்குள் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது. லண்டன் ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான நிலையில் தோல்வியடைந்தது.

கடந்த 40 ஆண்டுகளில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் கண்ட கேவலமான தோல்வி இது. இதற்கு முன்னர் 1958 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்திலும், 1974 ஆம் ஆண்டில் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 285 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்வியும் இந்திய அணியின் மிகவும் மோசமான டெஸ்ட் தோல்விகளாகும்.

இந்திய அணி தற்போது அடைந்துள்ள அவமானகரமான தோல்விக்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் கூறுகையில், “கடினமான லார்ட்ஸ் பிட்ச்சில் இந்திய அணி வென்ற பிறகு பயிற்சியாளர் பிளட்சர் என்ன செய்தார். அணியின் பிரச்சினையை தீர்க்கும் திறமை அவரிடம் இல்லை. பிளட்சர் பயிற்சியாளர் பதவியில் இருந்து செல்ல வேண்டும் என்பது தான் எனது கருத்தாகும்.

டோனி தனது பேட்டிங் நுணுக்கத்தை மாற்றி நன்றாக பேட்டிங் செய்தாலும், கேப்டன் பதவியில் ஏன்? அவர் ஆட்ட நுணுக்கத்தை மாற்றி செயல்படவில்லை. பீல்டிங்கில் ‘தேர்டு மேனை’ நிறுத்தாததால் அந்த இடத்தில் பாதிக்கு மேல் ரன்கள் சென்றன.

அணி தேர்விலும் கேப்டன் சரியாக முடிவு எடுக்கவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே அஸ்வினை அணியில் சேர்த்து இருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத் கூறுகையில், “கீப்பிங் மற்றும் கேப்டன் பதவியில் டோனியில் செயல்பாடு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.

அவர் எப்பொழுதும் அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதிசயங்கள் எப்பொழுதும் நடக்காது. எப்போதாவது ஒரு நேரம் தான் அதிசயம் நடக்கும்“ என்று கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா கூறுகையில், “இந்திய அணிக்கு பயிற்சியாளர் பிளட்சரின் பங்களிப்பு பெரிய ஜீரோ என்று நான் அடித்து சொல்வேன்“ என்று கூறியுள்ளார்.

முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், “பிளட்சர் அணிக்கு எந்தவித பங்களிப்பையும் செய்யவில்லை“ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இங்கிலாந்து ஊடகங்கள் இந்திய அணியையும், வீரர்களையும் ஏளனம் செய்துள்ளன. இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியை கடுமையாக கிண்டல் செய்துள்ளார்.