வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2015 (14:00 IST)

இந்தியாவை வீழ்த்தி சொன்னதை செய்து காட்டிய டி வில்லியர்ஸ்

நாங்கள் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்பதை உலக்குக்கு காட்டுவோம் என்று சொன்னதை டி வில்லியர்ஸ் செய்து முடித்துள்ளார்.
 

 
பொதுவாக எந்தவொரு அணியையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு, பிட்சின் தன்மையை குறித்து அறிந்திருப்பது, சீதோஷண நிலை ஆகியவை குறித்த விஷயங்கள் உள்ளூர் அணிகளுக்கு பரீட்சையமாக இருக்கும்.
 
குறிப்பாக இந்திய அணி அந்நிய மண்ணில் சொதப்பும் போதும், உள்ளூர் மண்ணில் சிறப்பாக தொடர்ந்து விளையாடியே வந்துள்ளது. ஆனால், இதற்கு மாறாக திறமையோடு செயல்படும் அணி, உள்ளூர் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்பதை நிரூபணம் செய்யும்.
 
அதுபோல, தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 199 ரன்கள் குவித்தது. ஆனால், அந்த ஸ்கோரை தென் ஆப்பிரிக்கா அணி சேஸிங் செய்தது.
 
இரண்டாவது போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனையும் தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்து தொடரைக் கைப்பற்றியது. 3ஆவது டி 20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
 
டி 20 தொடரை கைப்பற்றிய பிறகு, ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடத்தில் பேசிய டி வில்லியர்ஸ், “நாங்கள் இந்த தொடரை கைப்பற்றுவோம். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தோம். அந்த தொடரில் நான் பங்கேற்றேன்.
 
நாங்கள் இந்த தொடரில் வெற்றிபெற விரும்புகிறோம். எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று உலகுக்கு காண்பிக்க விரும்புகிறோம். நாங்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடப் போகிறோம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
அவர் சொன்னதைப் போலவே, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்ட்டியுள்ளார்.
 
முதல் ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
 
3ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்திலும், 4ஆவது போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
 
நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 வித்தியாசத்தில் இமாலய தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
 
அதே போல சென்னையில் நடைபெற்ற போட்டியில் தோற்ற பிறகு பேசிய டி வில்லியர்ஸ் “மும்பை ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்” என்று கூறியிருந்தார். சொன்னதை போலவே அவர் உட்பட 3 வீரர்கள் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஆனால், இந்திய ரசிகர்கள் வாயடைத்து போய் உட்கார்ந்திருந்தனர்.