தொடரை முழுமையாக இழந்து வங்கதேசத்திடம் பணிந்தது பாகிஸ்தான்

Mahalakshmi| Last Modified வியாழன், 23 ஏப்ரல் 2015 (10:32 IST)
பாகிஸ்தான் அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது வங்க தேசம் அணி.
 
பாகிஸ்தான் அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இத்தொடரின் 3 ஆவது ஒரு நாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் அசார் அலி, சமி ஆகிய வீரர்கள் சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தனர். தொடர்ந்து அசத்திய அசார் அலி சதத்தை பதிவு செய்தார். பின்னர் சோகைல் அரை சதத்தை கடந்தார். எனினும் பின் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
பின்னர் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. இதைத்தொடர்ந்து வங்கதேச வீரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் தொடக்க ஆட்டக்காரர்களான இக்பால், சர்கார் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர்.எனினும் இக்பால் 64 ரன்களில் வெளியேறினார். 
 
மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட மெக்முதுல்லா 4 ரன்களில் ஏமாற்றினார். பின்னர் இணைந்த  சர்கார் - ரஹிம் ஜோடி வங்கதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் வங்கதேச அணி 39.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.


இதில் மேலும் படிக்கவும் :