1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2015 (12:04 IST)

நியூசிலாந்து அணிக்கு பேரிழப்பு - அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லம் ஓய்வு

நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரும், டெஸ்ட் அணி கேப்டனுமான பிரண்டன் மெக்கல்லம் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளார்.
 

 
இலங்கை எதிரான தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியிலும், நியூசிலாந்து அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
 
இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரண்டன் மெக்கல்லம் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரோடு தான் ஓய்வுபெற உள்ளதாக அறிவித்தார்.

 
இது குறித்து அவர் கூறுகையில், “உண்மையிலேயே, நான் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு எனது ஓய்வை பற்றி அறிவிப்பதற்கு தயாராக காத்திருந்தேன்.
 
ஆனால், நடைபெறவிருக்கும் டி-20 உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வின்போது, தேவையில்லாத குழப்பத்தையும், ஊகங்களையும் நிறைய ஏற்படுத்தும் என்பதற்காகவும், அதனை தவிர்ப்பதற்காகவும் அறிவிக்க வேண்டியதாகி விட்டது” என்று தெரிவித்தார்.
 
பிப்ரவரி 12ம் தேதி வெலிங்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அவரது 100ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

 
2004ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரண்டன் மெக்கல்லம் இதுவரை, 99 போட்டிகளில் விளையாடி 6273 ரன்களை [சதங்கள்-11, அரைச்சதங்கள்-31, அதிகப்பட்சம்-302, சிக்ஸர்கள்-100, கேட்சுகள்-194] குவித்துள்ளார்.
 
அதேபோல 2002ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி இதுவரை, 254 போட்டிகளில் விளையாடி 5909 ரன்களை [சதங்கள்-5, அரைச்சதங்கள்-31, அதிகப்பட்சம்-166, சிக்ஸர்கள்-190, கேட்சுகள்-258] குவித்துள்ளார்.
 
மேலும், இந்தியாவில் நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியின், முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கிய பிரண்டன் மெக்கல்லம், 158 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.