வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 4 மார்ச் 2015 (17:25 IST)

ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை - உலகக் கோப்பை போட்டியில் 418 ரன்கள் குவித்தது

ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 418 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
 
உலகக் கோப்பை போட்டியின் 26ஆவது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணுகளுக்கிடையே பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
 

 
இதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித்தும், வார்னரும் ஜோடி சேர்ந்து ஆஃப்கானிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
 
நாளாபுறமும் பந்துகளை ஓடவிட்ட டேவிட் வார்னர் 92 பந்துகளில் [11 பவுண்டரிகள்] சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் அபாரமாக ஆடி 133 பந்துகளில் [19 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்] 178 ரன்களை எடுத்து வெளியேறினார்.
 
வார்னர், ஸ்மித் ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 260 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக களம் இறங்கிய மேக்ஸ்வெல் ஆரம்பம் முதலே தனது வழக்கமான அதிரடியைத் தொடர்ந்தார். இதனால் அவர் 21 பந்துகளில் 50 ரன்களை குவித்தார்.
 

 
இதற்கிடையே, ஸ்மித் 98 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து வெளியேறினார். 39 பந்துகளில் 7 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உட்பட 88 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஃபால்க்னர், மார்ஷ் அடுத்தடுத்து வெளியேறினர்.
 
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 417 ரன்களை குவித்தது. இதையடுத்து 418 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  பிரம்மாண்ட இலக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
 
ஆஸ்திரேலியா சாதனை:
 
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது  இந்திய அணியினர், பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணி இன்று முறியடித்துள்ளது.