1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 14 மார்ச் 2015 (16:00 IST)

ஸ்காட்லாந்தை 20-20 போல் அதிரடியாக ஆடி துவம்சம் செய்த ஆஸ்திரேலியா

இன்று நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
ஓவலில் நடைபெற்ற 40ஆவது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கிளார்க் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
 
உற்சாகத்தில் ஆஸ்திரேலிய அணியினர்
இதன்படி முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியினரால், ஆஸ்திரேலியாவின் புயல்வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் கோட்சர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மெக் லியோட், மாட் மக்கான் இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர்.
 
பின்னர் லியோட் 22 ரன்களிலும், மக்கான் 40 ரன்களிலும் வெளியேறினர். அடுத்த களமிறங்கிய மாம்சன், கோல்மென் இருவருமே அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர். பெரிங்க்டன் 1 ரன்னில் நடையை கட்டினர்.
ஸ்காட்லாந்து வீரர் ஜோஸ் தாவே
பிறகு களமிறங்கிய வீரர்களில் ஜோஸ் தாவே (26), மைக்கேல் லீஸ்க் (23) இருவரும் மட்டுமே இரட்டை இலக்கத்தை தாண்டினர். குறிப்பாக ஸ்காட்லாந்து வீரர்களில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்
இறுதியில், 25.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் ஸ்காட்லாந்து அணி 130 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

பின்னர், 131 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிளார்க் (47) மற்றும் ஆரோன் பிஞ்ச் 10 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள்] 20 எடுத்து இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
 
47 ரன்கள் குவித்த மைக்கேல் கிளார்க்
அடுத்து வந்த வாட்சன் 24 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஃபால்க்னர், டேவிட் வார்னரும் இருவரும் 20-20 போல் அதிரடி காட்டினர். ஃபால்க்னர் 6 பந்துகளில் [2 பவுண்டரி, 1 சிக்ஸர்] 16 ரன்களும், டேவிட் வார்னர் 6 பந்துகளில் [2 பவுண்டரி, 2 சிக்ஸர்] 21 ரன்கள் எடுத்தனர்.
 
இதனால் ஆஸ்திரேலியா 15.2 ஓவர்களிலேயே 133 ரன்கள் எடுத்து எளிதான வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க் தட்டிச் சென்றார். இதன் மூலம் ’ஏ’ பிரிவில் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.