வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 29 மார்ச் 2015 (18:26 IST)

கோப்பையுடன் விடைபெற்றார் கிளார்க்; நியூசிலாந்தை வீழ்த்தி 5ஆவது முறையாக ஆஸி. சாம்பியன்

உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் ஆனது.
 
உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறும் மைக்கேல் கிளார்க்
உலக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
 
அதன்படி முதலில் மார்டின் கப்திலும், பிரண்டன் மெக்கல்லமும் களமிறங்கினர். மெக்கல்லம் சந்தித்த 2ஆவது பந்தை அடித்து ஆட முயற்சித்தார். ஆனால், ஸ்டார்க் அற்புதாமாக அதை லெக் சைடில் வீசி கட்டுப்படுத்தினார். ஆனால் அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
 
அரைச்சதம் எடுத்த கிராண்ட் எல்லியாட்
முதல் ஓவரிலேயே அவுட்டானது அதிர்ச்சிகரமாக அமைந்தது. 3 ஓவர்களுக்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பின்னர் மார்டின் கப்திலும் 15 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வில்லியம்சனும், ஜான்சன் பந்துவீச்சில் ஜான்சனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
இதனால், 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ராஸ் டெய்லரும், கிராண்ட் எல்லியாட்டும் ஆஸியின் முரட்டு பந்துவீச்சிற்கு ஈடு கொடுத்து ஆடினர். சிறப்பாக ஆடிய எல்லியாட் 51 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்கள் எடுத்தார்.
 

 
பேட்டிங் பவர்பிளே ஆரம்பித்ததும் முதல் பந்திலேயே ராஸ் டெய்லர் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஆண்டர்சன், ரோஞ்சி இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்த வந்த வெட்டோரியும் ஜான்சன் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
 
டிம் சவுதி 9, ஹென்றி 0 என அடுத்தடுத்து வெளியேற நியூசிலாந்து அணி 45 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 150 ரன்களுக்கு 3 விக்கெட் என்றிருந்த நியூசிலாந்து, அடுத்து 33 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
 
நியூசிலாந்து வீரர்களில் மெக்கல்லம் உட்பட 4 வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜான்சன் மற்றும் ஃபால்க்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் பிஞ்ச் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணியினர் பந்துவீச்சு தாக்குதலில் தீவிரம் காட்டினார். ஆனால், ஸ்மித்தும், வார்னரும் அற்புதமாக விளையாடினர்.
 
அணியின் எண்ணிக்கை 63ஆக இருந்தபோது வார்னர் 45 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு கேப்டன் கிளார்க் தனது இறுதிப்போட்டியை சிறப்பாக விளையாடினார். அவர் 56 பந்துகளில்  [5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்கள் எடுத்தார்.
 
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஷேன் வாட்சன்
கிளார்க்கும், ஸ்மித்தும் இணைந்து 112 ரன்கள் குவித்தனர். அணி வெற்றிபெற 9 ரன்களே தேவைப்பட்ட நிலையில் கிளார்க் அவுட்டானார். அதைத் தொடர்ந்து ஸ்மித் அரைச்சதம் எடுத்தார். இறுதியில் 33.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்தது.
 
உலகக்கோப்பையுடன் ஆஸ்திரேலிய வீரர்கள்
இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 5ஆவது முறையாகக் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த கேப்டன் கிளார்க் கோப்பையுடன் ஓய்வு பெற்றார். நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றார்.