வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (13:15 IST)

இந்தியா வெற்றி: நியூசிலாந்தை துவம்சம் செய்த அஸ்வின்!

இந்தியா வெற்றி: நியூசிலாந்தை துவம்சம் செய்த அஸ்வின்!

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளன. 22-ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.


 
 
முதலாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை அன்று கான்பூரில் தொடங்கியது. இது இந்திய அணி பங்கேற்கும் 500-வது டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
முதலில் பேட் செய்த இந்திய அணி 318 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து இந்திய அணியினரின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 152 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து வலுவான நிலையில் இருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினர்.
 
152 ரன்னுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி 262 ரன்கள் குவிப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 56 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 377 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு இந்தியா 434 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது.
 
இதனையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்து தோல்வியை தவிற்க போராடி வருகிறது. இந்தியா தரப்பில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இந்த இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அவர் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்டை வீழ்த்திய சாதானையை நிகழ்த்தியுள்ளார்.
 
இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்திலும் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொண்டார்கள். சீரான இடைவெளியில் நியூசிலாந்து விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் சாய்த்தனர். இறுதியில் 236 ரன்னில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
 
இதன் மூலம் இந்தியா 197 ரன்கள் வித்தியாசத்தில் தனது 500-வது டெஸ்டின் வெற்றியை ருசித்தது. நேற்று ஏற்கனவே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் இன்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த டெஸ்டில் அவர் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.