1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (17:30 IST)

மீண்டும் முதலிடத்தை பிடித்தார் அஸ்வின்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளார்.


 
 
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த அஸ்வின், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆட்டநாயகன் விருதும் அவருக்கு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது ஐசிசி. இதில் இந்தியாவின் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 875 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், பிராட் 852 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
 
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா 832 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.