1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 24 அக்டோபர் 2015 (14:45 IST)

8 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஐபிஎல் அணியில் இடம் பிடிக்கும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க விதிப்பட்டுள்ள தடையை அடுத்து, அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புது அணியில் இடம்பெற உள்ளார்.
 

 
கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தோனியை 7.5 கோடி மதிப்பில் ஏலத்தில் எடுத்தது. அதன், பின்னர் தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக தோனி சென்னை அணியில் நீடித்து, அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். வேறு எந்த வீரரும் ஐபிஎல் போட்டிகளில் எட்டு ஆண்டுகளாக ஒரே அணிக்கு தலைமை தாங்காது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்தரா ஆகியோருக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தப்பட்டது.
 
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க தலா 2 ஆண்டுகள் தடையும், குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட ஆயுட்கால தடையும் விதித்து உத்தரவிட்டது.
 
இந்நிலையில், நேற்று இந்தியா சிமெண்டஸ் உரிமையாளரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சீனிவாசனை தோனி சந்தித்துப் பேசினார். அதன் பிறகு நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டுச் சென்றார்.
 
இதற்கிடையில், 2 புதிய அணிகள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், புதிய அணிக்கு மகேந்திர சிங் தோனி தலைமை வகிப்பார் என்று தெரியவந்துள்ளது.