1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 23 டிசம்பர் 2015 (20:48 IST)

இந்தியர் ஒருவர்கூட இடம்பெறாத ஐசிசி விருதுகள்; சிறந்த வீரர்களாக டி வில்லியர்ஸ், ஸ்மித் தேர்வு

2015-இன் சிறந்த ஒருநாள் வீரர் டி வில்லியர்ஸ்

2015ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் வீரராக தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

 
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஆண்டுதோறும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
 
ஒருநாள் போட்டியை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
அதேபோல், இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஸ்மித் கூறுகையில், ”2015ஆம் ஆண்டினை ஒரு கலவையாகத்தான் நான் பார்க்கிறேன். ஒருநாள் உலகக்கோப்பை போட்டியை சொந்த மண்ணில் வென்றதில் மகிழ்ச்சி.
 
அதுபோல ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக உண்மையிலேயே நான் பெருமை அடைகிறேன். ஆனால், இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரை இழந்தது ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.
 
இந்த ஆண்டின் ஆண்டின் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர் விருதினை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
டி 20 சிறப்பாக செயல்பட்டவர் என்ற விருதினை தென் ஆப்பிரிக்காவின் ஃபாப் டு பிளஸ்ஸி பெற்றுள்ளார். ஜோஹன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2ஆவது டி 20 போட்டியில் 56 பந்துகளில் 119 ரன்கள் குவித்ததன் மூலம் இவ்விருதினை பெற்றுள்ளார்.
 
இந்த ஆண்டு கிரிக்கெட்டினை அதிகளவில் உற்சாகப்படுத்தியவருக்கான விருதினை அடுத்த ஆண்டில் ஓய்வுபெற இருப்பதாக அறிவித்துள்ள நியூசிலாந்தின் அதிரடி வீரர் பிரண்டன் மெக்கல்லமிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசி அறிவித்துள்ள சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களில் ஒருவர்கூட, எந்தப் பிரிவின் கீழும் இடம்பெறவில்லை. இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.