1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 13 ஜூலை 2015 (10:15 IST)

ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.


 

 
இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நேற்று நடந்தது.
 
டாஸ் வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதைத் தொடர்ந்து முரளிவிஜயும், கேப்டன் ரஹானேவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.
 
விக்கெட்டை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்குடன் மிக எச்சரிக்கையுடன் ஆடிய இவர்கள் பல பந்துகளை வீனடித்தனர்.
 
இதனால், முதல் 20 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதில் 6 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டிருந்தன. 68 பந்துகள் வீணடிக்கப்பட்டிருந்தன.
 
பின்னர் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. 23.1 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. ஜிம்பாப்வே மண்ணில் இந்திய தொடக்க ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 2 ஆவது நிகழ்வாகும்.
 
அணியின் ஸ்கோர் 112 ரன்களாக உயர்ந்தபோது, ரஹானே ஆட்டம் இழந்தார். 63 ரன்களுடன் (83 பந்து, 7 பவுண்டரி) திரும்பினார்.  இதையடுத்து அம்பத்தி ராயுடு களமிறங்கினர். சிறிது நேரத்தில், ஒரு நாள் போட்டியில் விஜய் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
 
பின்னர், அடுத்தடுத்த ஓவர்களில் இரு சிக்சர் அடித்து ஆறுதல் அளித்த விஜய் (72 ரன், 95 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) மீண்டும் ஒரு சிக்சருக்கு முயற்சித்த போது கேட்ச் ஆகி வெளியேறினார்.
 
அம்பத்தி ராயுடுவை (41 ரன், 50 பந்து, 3 பவுண்டரி) தவிர மற்ற வீரர்களின் பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை. கைவசம் விக்கெட்டுகள் இருந்தும், ரன்வேகத்தை தீவிரப்படுத்த தவறினர்.
 
இதனால் இறுதி கட்டத்தில் ஸ்கோர் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 77 ரன்களை மட்டுமே எடுத்தது. முடிவில் 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் சேர்த்தது.
 
இதையடுத்து களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 43 ரன்னுக்குள் சிபாண்டா (2 ரன்), மசகட்சா (5 ரன்), கேப்டன் சிகும்புரா (9 ரன்) ஆகிய முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது.
 
இதனால், ஜிம்பாப்வேயால் இறுதிவரை தலைதூக்கவே முடியவில்லை. அந்த அணி 49 ஓவர்களில் 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதனால் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல்முறையாக அரைசதம் அடித்த தமிழகத்தை சேர்ந்த விஜய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.