வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 2 மே 2014 (20:30 IST)

யுக்ரேன் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

கிழக்கு யுக்ரேனில் ஸ்லவியான்ஸ்க் நகரில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து வருவதாக யுக்ரேனின் இடைக்கால அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ஆர்ஸென் அவாகோவ் கூறியுள்ளார்.

அரச படைகள் நகரிலுள்ள ஒன்பது சோதனைச் சாவடிகளைக் கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
தாங்கள் இன்னும் மூன்று சோதனைச் சாவடிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ரஷ்ய ஆதரவுப் படையினர் கூறுகின்றனர்.
 
யுக்ரேனின் இரண்டு ஹெலிகாப்டர்கள் சுட்டுவீழ்த்துப்பட்டுள்ளதாகவும் அதிலிருந்த விமானிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யுக்ரேன் உறுதிப்படுத்தியுள்ளது.
 
தரையிலிருந்து வானுக்குத் தொடுக்கப்படும் ஏவுகணைகளைக் கொண்டு இந்த ஹெலிகாப்டர்கள் வீழ்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
 
ரஷ்ய ஆதரவுச் சக்திகள் வெறுமனே அமைதியான போராட்டக்காரர்கள் என்பதற்கு மாறாக, முழுமையான ஆயுத மற்றும் நிபுணத்துவ வளங்களைப் பெற்றுள்ளதையே இந்த சம்பவம் காட்டுவதாகவும் யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.
 
பழிவாங்கல் நடவடிக்கை: ரஷ்யா
 
இதற்கிடையே, யுக்ரேனின் தென்-கிழக்குப் பிராந்தியத்தில் யுக்ரேன் தண்டிக்கும் விதமான இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடீனின் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் எட்டப்பட்ட உடன்படிக்கை மீதிருந்த கடைசி நம்பிக்கையையும் அது ஒழித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
குழப்ப நிலைமைகளைத் தணிப்பதற்கு ரஷ்யா முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற சூழ்நிலையில், யுக்ரேன் அரசாங்கம் அமைதியான சமூகங்கள் மீது பழிவாங்கல் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாக ரஷ்ய அதிபரின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
 
தென்- கிழக்கு யுக்ரேனில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் புடீன் தனது பிரதிநிதியை அனுப்பியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.