1. செய்திகள்
  2. »
  3. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  4. »
  5. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 10 ஏப்ரல் 2014 (18:51 IST)

செயலிழந்த தண்டுவடம் மின்சார தூண்டுதலால் செயற்படுகிறது

பாதிப்புக்கு உள்ளான முதுகு தண்டுவடத்தில் மின்சாரம் பாய்ச்சி, அதன்மூலம் செயலிழந்த கால்களை மீண்டும் செயற்படவைக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக கால்கள் செயலிழந்துபோயிருந்த நான்கு பேரின் முதுகு தண்டுவடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு கீழாக மருத்துவர்கள் மின்சாரம் பாய்ச்சி முதுகு தண்டுவட நரம்புகளை தூண்டிவிட்டனர். அதைத் தொடர்ந்து அந்த நான்கு பேரின் கால்களும் செயற்படத் துவங்கியிருக்கின்றன.
 
அவர்கள் தங்களின் கால்களை அசைக்கவும், முட்டியை மடக்கவும், கட்டைவிரலை அசைக்கவும் முடிந்திருக்கிறது. அதே சமயம் அவர்களால் இன்னமும் சுயமாக நடக்க முடியவில்லை.
 
பிரெய்ன் என்கிற மருத்துவ ஆய்வு சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகளின்படி, முதுகுத் தண்டுவடத்தில் அளிக்கப்பட்ட மின்சார தூண்டுதல் மூலம் மூளையில் இருந்து அனுப்பப்படும் மின்காந்த சமிஞ்சைகள் மூளையில் இருந்து முதுகுத் தண்டுவடத்தின் மூலம் கால் நரம்புகளுக்கு செல்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த முக்கிய கண்டுபிடிப்பின் மூலம் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்கால சிகிச்சை முறைக்கு புதிய வழி பிறந்திருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
 
ரயில் தண்டவாளமாக செயற்படும் முதுகு தண்டுவடம்
 
மனித உடலில் முதுகுத் தண்டுவடம் என்பது அடிப்படையில் ஒரு ரயில் தண்டவாளம் போல செயற்படுகிறது. மூளையில் இருந்து அனுப்பப்படும் மின்காந்த சமிக்ஞைகளை முதுகுத் தண்டுவடம் உடலில் மற்ற எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது.
 
இப்படியான முதுகுதண்டு வடத்தில் காயம் ஏற்பட்டாலோ அல்லது முதுகு தண்டுவடம் சிதைவுற்றாலோ, மூளையில் இருந்து அனுப்பப்படும் மின்காந்த சமிக்ஞைகள் உடலின் பாகங்களுக்கு செல்ல முடியாமல் போகிறது. எனவே முதுகு தண்டு வடத்தின் எந்த பகுதியில் காயம் ஏற்பட்டதோ அந்த பகுதிக்கு கீழே இருக்கும் உடலின் பகுதிகள் முற்றாக செயலிழந்து போகும்.
 
அதுமட்டுமல்லாமல் அப்படி செயலிழந்து போன உடலின் பகுதிகளில் உணர்வும் மரத்துப்போகும். கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இப்படி காயம்பட்ட முதுகு தண்டுவடத்திற்கு கீழே இருக்கும் முதுகு தண்டுவடத்தில் மின்சார தூண்டுதலை அளிக்கும் பரிசோதனைகளை கடந்த சில ஆண்டுகளாகவே செய்து வந்தனர்.
 
மூன்று ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட முதல் வெற்றி
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமக மார்பு பகுதிக்கு கீழே உடல் செயலிழந்தவிட்டிருந்த பேஸ்பால் ஆட்டக்காரர் ராப் சம்மர்ஸுக்கு இது போல மின் தூண்டுதல் அளித்ததன் விளைவாக அவரது கால்களை அவரால் அசைக்க முடிந்தது என்பதை மருத்துவ விஞ்ஞானிகள் நிரூபித்திருந்தனர். தற்போது மேலும் மூன்று பேரை அதே முறையில் கால்களை அசைக்கச் செய்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
 
இதன் மூலம் மின்சார தூண்டுதலை பயன்படுத்தி முதுகுத்தண்டு வடத்தின் மின்காந்த சமிக்ஞ்சைகளை கடத்தும் செயற்பாட்டை மீண்டும் செய்ய வைக்க முடியும் என்கிற நம்பிக்கை மருத்துவ விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 
இந்த ஆய்வின் முடிவுகள் முதுகு தண்டுவட பாதிப்புக்களுக்கான சிகிச்சை முறையின் சாத்தியத்தை விரிவுபடுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், இது அனைவர்க்கும் பயனளிக்குமா என்பது குறித்து மேலதிக ஆய்வுகள் செய்யவேண்டியது அவசியம் என்றும் கூறியிருக்கிறார்கள்.