வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 15 மே 2016 (14:49 IST)

"இளவயது திருமணங்கள் முஸ்லிம் பெண்களை மிகவும் பாதிக்கிறது"

இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கு சிறு வயதில் திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்கள் சமூக மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர் என புதிய ஆய்வொன்றில் கண்டறிப்பட்டுள்ளது.
 

 
குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பது, முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளதாக ஆய்வை மேற்கொண்டவரும் பெண்ணியல் சட்டத்தரனியுமான ஹஸானா சேகு இஸத்தீன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
 
இதனால் இந்த சிறுமிகளின் கல்வி உரிமைகள் நிராகரிக்கப்படுவதுடன், அவர்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கும் தயாராவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்படுகின்றனர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதனால் அவர்கள் திருமணம் செய்து சில காலத்திலேயே விவாகரத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றும் சட்டத்தரணி ஹஸானா இஸத்தீன் கூறினார்.
 
இந்த விஷயம் தொடர்பில் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்று முஸ்லிம் தரப்பினர் கூறுகின்றனர் எனவும், முஸ்லிம்கள் இல்லாத அரச தரப்பினரோ மதம் சார்ந்த இந்த விஷயத்திற்கு தங்களால் சுயமாக முடிவெடுக்க முடியாது என கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆனால் இதை மத பிரச்சினையாக பார்க்காமல் சிறுமிகளின் உடல், உளரீதியான பிரச்சினையாக பார்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
 
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என பொதுவான சட்டம் இருக்கின்ற நிலையில், மதத்தை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் சிறு வயது திருமணங்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.
 
முன்னதாக, இது தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்திருந்த மகளிர் விவகாரங்களுக்கான அமைச்சர் சந்திராணி பண்டார, இது மதம் சார்ந்த விஷயம் என்பதனால் தங்களால் முடிவு எடுக்க முடியாது எனவும், முஸ்லிம் தரப்பினரின் பரிந்துரைகளுக்கமையே நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் கூறியிருந்தார்.