1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (23:59 IST)

செளதி அரசரிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன்: என்ன விவாதிக்கப்பட்டது?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செளதி அரசர் சல்மானிடம் தொலைபேசியில் பேசினார். பைடன் அமெரிக்காவின் பழைய கூட்டாளியான செளதி அரேபியா உடனான உறவு முறையை ஒரு புதிய பாதையில் அமைக்க விரும்புகிறார்.
 
அமெரிக்கா உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மீண்டும் பைடன் உறுதிப்படுத்தினார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
 
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலை தொடர்பான அறிக்கையைப் படித்துவிட்டு, ஜோ பைடன் செளதி அரேபியாவை அழைத்தார். இந்த அறிக்கை இதுவரை பொதுவெளிக்கு தெரியப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இருப்பினும் இந்த அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் செளதியின் முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் பெயரும் உட்படுத்தப்பட்டு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
செளதியுடன் நெருக்கமாக இருந்த டிரம்ப்
 
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செளதி அரேபியா உடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார்.
 
டிரம்பின் நிர்வாகம், ஜமால் கஷோக்ஜி கொலை தொடர்பான அறிக்கையை ரகசியம் நீக்கப்பட்ட ஆவணமாக வெளியிட மறுத்தது. அதற்கு மாறாக செளதி அரேபியா உடனான உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தியது.
 
ஆனால் ஜோ பைடன், செளதி அரேபியா உடனான உறவில் சில இடங்களில் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த 2018-ம் ஆண்டு, துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் இருக்கும் செளதி தூதரகத்தில் வைத்து ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்டு, அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டது. இதில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என செளதி இளவரசர் மறுத்தார்.
 
"செளதியில் பல அமெரிக்க செயற்பாட்டாளர்கள் மற்றும் லுஜேன் அல் ஹத்லூல் போன்றோரை விடுவித்ததை நேர்மறையாக பாராட்டினார். அதோடு உலக அளவில் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் வழியே நடப்பதற்கு அமெரிக்கா வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும் பைடன் உறுதிப்படுத்தினார்," என அமெரிக்க வெள்ளை மாளிகை, ஜோ பைடன் மற்றும் செளதியின் அரசர் சல்மானுக்கு இடையில் நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
செளதி பெண்களின் உரிமைக்காகப் போராடிய லூஜென் அல் ஹத்லூல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் இந்த மாதம் தான் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான பயணத் தடை மற்றும் ஊடகங்களுடன் பேசுவதற்கான தடை தொடர்கிறது.
 
இரு நாட்டுத் தலைவர்களும், தங்கள் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்தும், செளதி அரேபியாவுக்கு இரானிய ஆதரவுக் குழுக்களால் நிலவும் அச்சுறுத்தல் குறித்தும் விவாதித்தார்கள்.
 
ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: 5 கைதிகளின் மரண தண்டனையை குறைத்தது செளதி நீதிமன்றம்
 
"இருநாடுகளுக்கு இடையிலான உறவுமுறையை எவ்வளவு வலிமையாகவும், வெளிப்படையாகவும் வளர்த்தெடுக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக வளர்த்தெடுக்கப் பணியாற்றுவேன் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செளதி அரசர் சல்மானிடம் கூறினார்," என வெள்ளை மாளிகையின் அறிக்கை கூறுகிறது.
 
"இருநாட்டுத் தலைவர்களும் வரலாற்று ரீதியிலான தங்கள் நட்புறவையும், தங்கள் பிரச்னைகள் மற்றும் விருப்பங்களை இணைந்து தீர்த்துக் கொள்வோம் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்"
 
ஜமால் கஷோக்ஜி எப்படி கொல்லப்பட்டார்?
 
ஒரு காலத்தில் செளதி அரசுக்கு ஆலோசகராக இருந்த, 59 வயதான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, செளதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த 2018 அக்டோபரில் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் இருக்கும் செளதி அரேபிய தூதரகத்துக்கு, தன் வருங்கால மனைவியை (துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்) மணந்து கொள்வது தொடர்பாக சில அரசுப் பத்திரங்களைப் பெறச் சென்றார்.
 
செளதி தூதரகத்துக்கு பாதுகாப்பாக வந்து போகலாம் என, அப்போது செளதி அரேபியாவின் அமெரிக்க தூதராக இருந்த செளதி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் சல்மானின் சகோதரர் காலித் பின் சல்மான் உறுதிமொழி கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் இளவரசர் காலித் அதை மறுத்தார்.
 
ஜமால் கஷோக்ஜிக்கு பலவந்தமாக அளவுக்கு அதிகமாக ஒரு மருந்து செலுத்தப்பட்டது. அதன் விளைவாக அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு, உள்ளூரில் இருக்கும் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது என செளதி அரேபியாவின் விசாரணையாளர்கள் தரப்பு கூறுகிறது.
 
ஜமால் கஷோக்ஜியை செளதிக்கு அனுப்பும் திட்டத்தில் ஈடுபட்ட செளதி உளவுப் படை அதிகாரிகள் நடத்திய ஒரு ஆபரேஷனில், அவர் கொல்லப்பட்டதாகக் கூறியது செளதி அதிகாரிகள் தரப்பு. அதில் தொடர்புடைய ஐந்து பேருக்கு, செளதி அரேபிய நீதிமன்றம் கடந்த 2020 செப்டம்பர் மாதத்தில், முதலில் மரண தண்டனை வழங்கியது. அதன் பின் அவர்களது தண்டனையை 20 ஆண்டு சிறை தண்டனையாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.