உடுமலைப்பேட்டை கொலை: சாதி மீறிய காதல் திருமணம் காரணமா?


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 14 மார்ச் 2016 (17:02 IST)
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். அவருக்கு வயது 22. இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
 
 
பொள்ளாச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அவர், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.
 
சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கும் திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதையும் மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13-03-2016) இவர்கள் இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு சென்றனர். உடுமலை பேருந்து நிலையம் அருகே அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் திடீரென அரிவாள்கள் மூலம் இருவரையும் சரமாரியாக வெட்டும் கோரக்காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.
 
இவர்கள் இருவரையும் வெட்டிச் சாய்த்துவிட்டு அந்த மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் அடங்கிய கண்காணிப்புக் கேமெராக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
 
கத்தியால் வெட்டுண்டு படுகாயமடைந்த சங்கர் மற்றும் கவுசல்யாவுக்கு உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியில் சங்கர் இறந்துவிட்டார். கவுசல்யாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
தங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தலித் இளைஞரான சங்கரை கவுசல்யா திருமணம் செய்து கொண்டதை விரும்பாத பெண்ணின் உறவினர்கள் அல்லது அவர் ஜாதியைச் சேர்ந்த அமைப்பினர் இந்த கொலையை செய்தார்களா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருவதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஏற்கனவே சாதிக்கு வெளியே காதலித்த தலித் இளைஞர்களான தருமபுரி இளவரசன், நாமக்கல் கோகுல்ராஜ் வரிசையில் உடுமலைப்பேட்டை சங்கரின் உயிரும் சாதிக்கு வெளியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காகவே பறிக்கப்பட்டதா என்கிற விவாதம் மீண்டும் தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

இதில் மேலும் படிக்கவும் :